
கேரள மாநில மார்க்சிஸ்ட் கட்சியின் 23 வது மாநில மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி கண்ணூரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துக்கொள்ள வேண்டும் என்று அக்கட்சியின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதனை ஏற்று மாநாட்டில் கலந்துக்கொள்ளுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் சென்னையிலிருந்து புறப்பட்டு கண்ணூர் சென்றார். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வரவேற்றார்.
அதனை தொடர்ந்து மாநாட்டில் மத்திய மாநில உறவுகள் எனும் தலைப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர்கள், பொதுவுடைமை புரட்சியாளர்கள் சிறை வைக்கப்பட்டிருந்த இடம் கண்ணூர். பல்வேறு செயல்பாடுகளுக்காக விருதுகளைப் பெற்று விருதுகளின் முதலமைச்சராக பினராயி விஜயன் உள்ளார். ஒரு மாநிலத்தில் ஆட்சியை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார். எனக்கு ஒரு வழிகாட்டும் முன்னோடி முதலமைச்சராக இருக்கிறார். ஒரு கையில் போராட்ட குணம், ஒரு கையில் தொலைநோக்கு திட்டத்துடன் செயல்பட்டு வருகிறார் என்று புகழாரம் சூட்டினார்.
மத்திய அரசு அரசியல் சட்டம் அளித்துள்ள அதிகாரங்களை மீறி ஒன்றை தன்மையை உருவாக்குகிறது. அதிகாரத்தின் மூலம் அடக்கி ஆண்ட ஆங்கிலேயர்கள் கூட செய்யாத ஒன்றைத் தன்மையை பாஜக அரசு நிறுவ முயல்கிறது என்று வெளிபடையாகவே குற்றம் சாட்டுவதாக தெரிவித்தார்.தொடர்ந்து, தமிழ்நாட்டையும் கேரளாவையும் மட்டும் காப்பாற்ற மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்த முழக்கத்தை இங்கு வைக்கவில்லை. ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று தான் முழுங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால் முதலில் மாநிலங்கள் காப்பாற்றப்பட வேண்டும்.
திட்டக்குழு, தேசிய வளர்ச்சிக்குழு, ரயில்வே தனி பட்ஜெட் என அனைத்தையும் மத்திய அரசு கலைத்துவிட்டது. மேலும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவது கிடையாது. ஜனநாயகத்தை மரணிக்க வைப்பவர்களாக ஆளுநர்கள் இருக்கின்றனர். இன்றைக்கு தமிழ்நாட்டின் முதல்வராக நான் இருந்தாலும் கேரள முதல்வராக பினராயி விஜயன் இருந்தாலும் மத்திய அரசுக்கு தலையாட்டி பொம்மையாக இருந்தால் ஆட்சிக்கு சிக்கல் இல்லை. ஆனால் நாங்கள் தலையாட்டி பொம்மைகளாக இருக்க வேண்டுமா..? என்று கேள்வி எழுப்பினார்.
மாநிலங்களை ஒருங்கிணைத்து குழு அமைத்து நாம் போராட வேண்டும். தென் மாநிலங்களின் குழு ஒன்றை அமைக்க வேண்டும். அதற்கு அரசியல் எல்லைகளை கடந்து நாம் ஒன்றிணைய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். இதனிடையே தமிழக - கேரள உறவுகளை பற்றி மலையாளத்தில் முதலமைச்சர் பேசினார். மேலும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு A Dravidian Journey எனும் புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.