உயிரிழந்த போக்குவரத்து ஆய்வாளர் கனகராஜ் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி... அறிவித்தார் மு.க.ஸ்டாலின்!!

By Narendran SFirst Published Nov 22, 2021, 5:52 PM IST
Highlights

உயிரிழந்த போக்குவரத்து ஆய்வாளர் கனகராஜின், குடும்பத்தாருக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்திரவிட்டுள்ளார்.

கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வாளராக இருக்கும் கனகராஜ், இன்று காலை சுக்காலியூர் பகுதியில் காலை வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த வேன் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயற்சித்துள்ளார். அப்போது, அந்த வேன் நிற்காமல் அவர் மீது மோதிவிட்டு அதிகவேகமாக சென்றுவிட்டது.  இதில், தூக்கி வீசப்பட்ட கனகராஜ், பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது, சிகிச்சை பலனின்றி கனகராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, அவரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, இந்த விபத்து தொடர்பாக உடனே உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் மோதிய வாகனம் பதிவாகி உள்ளதா? என்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  கரூரில் வாகனம் மோதி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கரூரில் வாகன தணிக்கையின்போது சாலை விபத்தில்  உயிரிழந்த மோட்டர் வாகன ஆய்வாளர் கனகராஜ் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரியும் கனகராஜ், இன்று காலை கரூர்-திருச்சி நான்கு வழிச்சாலையில் வாகன தணிக்கை பணியிலிருந்தபோது எதிர்பாராத வகையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்துள்ளார். கனகராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர் அவர்கள், பணியிலிருக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார் என்ற துயரச் செய்தியினைக் கேள்வியுற்று மிகுந்த வருத்தமடைந்ததாகவும் இச்சம்பவத்தில் உயிரிழந்த கனகராஜ், குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த  இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த போக்குவரத்து ஆய்வாளர் கனகராஜின், குடும்பத்தாருக்கு அரசு சார்பாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் ஐம்பது இலட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

click me!