#BREAKING ஆன்லைன் வகுப்பு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவுகள்...!

By Kanimozhi PannerselvamFirst Published May 26, 2021, 7:56 PM IST
Highlights

தமிழகத்தில் உள்ள அனைத்து இணையவழி வகுப்புகளையும் பதிவு செய்ய வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. தற்போது ராஜகோபாலன் போக்சோ உள்ளிட்ட சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து இணையவழி வகுப்புகளையும் பதிவு செய்ய வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு வகுப்புகள் இணைய வழியாக சுமார் ஓராண்டாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வகுப்புகளின் செயல்பாடுகள் குறித்து சமீபத்தில் வரப்பெற்ற சில செய்திகளின் தன்மையைக் கருத்தில் கொண்டு இணைய வழி வகுப்புகளை முறைப்படுத்துவது குறித்தும் அதில் தவறுகள் நடக்கும் பட்சத்தில் அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் ஆலோசனை செய்வதற்கு முதலமைச்சர் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சமீபத்தில் இணைய வகுப்பு ஒன்றில் நடைபெற்ற சில விரும்பத்தகாத நிகழ்வுகள் குறித்தும் அதன் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்தும் முதலமைச்சர் ஆய்வு செய்தார்கள். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறக் கூடாது என்றும் சட்டபூர்வமான நடவடிக்கை சம்பயதப்பட்டவர்கள் மீது எடுக்கப்படும் என்றும் மற்ற பள்ளி கல்லூரிகளில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதற்கு பின்வரும் முடிவுகளையும், உத்தரவுகளையும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள்.

இணைய வழியாக நடத்தப்படும் வகுப்புகள் பள்ளியினால் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் இப்பதிவினை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் இருவரைக் கொண்ட குழுவால் அவ்வப்போது ஆய்வு செய்யப்பட வேண்டுமென்றும்; 

இணைய வழி வகுப்புகள் நடத்துவது தொடர்பாக முறையான வழிகாட்டுதல்களை வகுத்து வெளியிட பள்ளிக் கல்வித்துறை ஆணையர், கல்லூரி கல்வி இயக்குநர், கணினி குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான காவல் அலுவலர்கள், கல்வியாளர்கள் மற்றும் உளவியல் நிபுணர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்படும் என்றும், அக்குழு, மாநிலத்திலுள்ள பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பாலியல்
தொல்லைகள் தரப்படுவதை தடுப்பதற்கு உரிய வழிமுறைகளை பரியதுரைக்கவும் இணையவழி வகுப்புகளை நெறிப்படுத்துவது குறித்தும் வழிகாட்டு நெறிமுறையினை ஒருவார காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டுமென்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

இணைய வகுப்புகளில் நடந்துகொள்வோர் மீது முறையற்ற "போக்சோ" வகையில் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாணவ, மாணவிகள் தங்கள் புகார்களைத் தெரிவிக்க ஒரு Helpline எண் உருவாக்கவும் அறிவுறுத்தினார். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்

மேலும், இணைய வகுப்புகள் குறித்து வரும் புகார்களை மாநிலத்தின் கணினி குற்றத் தடுப்புக் (Cyber crime) காவல் பிரிவில் காவல் கண்காணிப்பாளர் நிலையில் உள்ள அலுவலர் உடனடியாக பெற்று சம்பந்தப்பட்ட மாணவ மாணவிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் விசாரித்து துரிதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

click me!