தமிழகத்தில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன?... அறிக்கை தர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 5, 2021, 1:07 PM IST
Highlights

தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து அறிக்கை சமர்பிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் இராஜன் தலைமையில் உயர்மட்ட குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

தமிழகத்தில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்தும், அந்த குழு மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு முறையால் நமது மாநிலத்தில் உள்ள கிராமப்புற, நகர்ப்புற ஏழை எளிய மாணவர்கள். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தமிழ்வழியில் கல்வி பயில்வோர் போன்ற நமது சமுதாயத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும் நிலை உள்ளதாக கல்வியாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இதனைக் கருதியே, சமூக நீதிக்கு எதிரான இந்த நீட் தேர்வு முறை கைவிடப்பட வேண்டுமென்றும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி, 12-வது வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே மருத்துவக் கல்லூரி இடங்கள் நிரப்பப்பட வேண்டுமென்றும் தொடர்ந்து வலியுறுத்தி, இதற்கான பல சட்டப் போராட்டங்களை தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடத்தி வந்துள்ளது. சமூக நீதியை நிலைநாட்டும் வரலாற்றுக் கடமை தமிழ்நாட்டிற்கு எப்போதும் உண்டு.  

இந்தக் கடமையைத் தொடர்ந்து நிறைவேற்றும் வகையில், நீட் தேர்வு முறையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அகற்றிடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்திட உறுதி பூண்டுள்ளது. இந்த நீட் தேர்வு முறையானது சமுதாயத்தின் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்தும், அவ்வாறு பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால் அவற்றை சரி செய்யும் வகையில், இம்முறைக்கு மாற்றாக அனைவரும் பயன்பெறத்தக்க வகையிலான மாணவர் சேர்க்கை முறைகளை வகுத்து, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் அவற்றிற்கான சட்ட வழிமுறைகள் பற்றியும் முழுமையாக ஆராய்ந்து, அரசுக்குப் பரிந்துரைகளை அளித்திட ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. ஏ.கே. இராஜன் தலைமையில், கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

click me!