அடுத்து இந்த கடனும் தள்ளுபடி?... மகளிர் வாக்குகளை அள்ளப்போகும் எடப்பாடியாரின் அடுத்த அதிரடி...!

By Kanimozhi PannerselvamFirst Published Feb 20, 2021, 10:46 AM IST
Highlights

அதாவது மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கிய கடனை, தள்ளுபடி செய்வது தொடர்பாக அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாத இறுதி அல்லது மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. எனவே தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

அந்தந்த மாவட்ட தேவைகளை அறிந்து அதிரடி அறிவிப்புகளை வழங்கி வரும் முதலமைச்சர் எடப்பாடியார், 16.43 லட்சம் விவசாயிகளின் நிலுவை தொகையான 12 ஆயிரத்து 110 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதேபோல் 24 மணி நேரமும் இலவச மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்ற அதிரடி உத்தரவும் விவசாயிகள் மத்தியில் அதிமுக மீதான ஆதரவை அதிகரித்துள்ளது. 

சமீபத்தில் தென்காசியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 10 மாவட்டங்களின் தலைநகரங்களில் ரூ.20 கோடியில் பிரம்மாண்ட சந்தைகள் அமைக்கப்படும் என தெரிவித்தார். இப்படி அடுத்தடுத்து அதிரடி காட்டி வரும் எடப்பாடியார் அடுத்து தாய்மார்களின் ஆதரவை பெற மாபெரும் அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதாவது மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கிய கடனை, தள்ளுபடி செய்வது தொடர்பாக அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும், கூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுக்களுக்கு எவ்வளவு கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்த விபரங்களை கூட்டுறவுத்துறை சேகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

click me!