எதுக்கு இவ்வளவு வீராப்பு... பாஜகவை வழிக்கு வரவைத்த கே.பி.முனுசாமி... ஓங்கிய எடப்பாடி பழனிசாமி கை...!

By vinoth kumarFirst Published Jan 12, 2021, 10:33 AM IST
Highlights

கூட்டணியில் பெரும்பான்மையான கட்சி என்பதால் முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் என்று பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியுள்ளார். இதனையடுத்து, முதல்வர் வேட்பாளர் சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. 

கூட்டணியில் பெரும்பான்மையான கட்சி என்பதால் முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் என்று பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியுள்ளார். இதனையடுத்து, முதல்வர் வேட்பாளர் சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. 

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் இணைந்து மக்களவைத் தேர்தலைச் சந்தித்தன. அப்போது தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தலைமை யார் என சர்ச்சை எழுந்தது. அதிமுகதான் தமிழகத்தில் பெரிய கட்சி என்பதால் அதிமுகவே கூட்டணிக்குத் தலைமை என ஒப்புக்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து, வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அதை பாஜக தலைவர்கள் ஏற்க மறுத்து வந்தனர். தேசிய ஜனநாய கூட்டணி முடிவு செய்பவரே முதல்வர் என மத்திய அமைச்சர் மற்றும் தமிழக பாஜக தலைவர்கள் தொடர்ந்து கூறிவந்தனர்.

ஒரு கட்டத்தில் கடுப்பான அதிமுக எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்பவருடன் தான் கூட்டணி என கே.பி.முனுசாமி  திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். மேலும், தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே இல்லை. அவர்கள் அதிமுக அல்லது திமுக முதுகில் ஏறித்தான் பயணம் செய்ய முடியும். 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையே தான் போட்டி என்றார்.  

இந்நிலையில், திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் மலைக்கோட்டை பகுதியில் பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- தமிழகத்தில் பெரும்பான்மை கட்சியாக இருப்பது அதிமுக தான். அவர்களுக்குப் பிறகுதான் பாஜக. எனவே அவர்களை முன்வைத்துத்தான் நாங்கள் இந்தத் தேர்தலை சந்திக்கப் போகிறோம். தமிழக மக்கள் சரியான முடிவை அதிமுக கூட்டணிக்குக் கொடுப்பார்கள் என்று நம்புகிறோம். 

பிரதமர் செய்த அனைத்து நன்மைகளையும் மக்கள் அறிந்திருக்கிறார்கள். தமிழகத்தில் அதிமுக பெரும்பான்மையான கட்சி என்பதால் அவர்கள் தான் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார்கள். கே.பி.முனுசாமி சொல்லும் கருத்தை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எடப்பாடி பழனிசாமியும், பன்னீர் செல்வமும் எடுப்பதே இறுதி முடிவு. அவர்கள் எங்களுக்கு ஆதரவு தருகிறார்கள் என்றார். இதனால் இதுவரை அதிமுக - பாஜக இடையே இருந்த பனிப்போர் முடிவுக்கு வந்துள்ளது.

click me!