முதலமைச்சராக மட்டுமல்ல நானும் டெல்டா காரன் எனவே எந்த காரணத்தைக் கொண்டும் தமிழ்நாடு அரசு நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதி அளிக்காது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நிலக்கரி சுரங்கம்
டெல்டா மாவட்டங்களில் 6 இடங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும், இதற்காக 500 இடங்களில் ஆழ்துளை போடப்பட்டு சோதனை செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில், தமிழக சட்டப்பேரவையில், எதிர்கட்சிகள் சார்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிலக்கரி சுரங்கம் தொடர்பாக செய்தி வந்த போது நானும் அதிர்ச்சிக்கு உள்ளானேன். செய்தியைப் பார்த்தவுடன் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசினேன்.
பிரதமருக்கு கடிதம்
அதன் பிறகு உடனடியாக பிரதமருக்கு கடிதம் எழுதி, அந்த கடிதங்களை நாடாளுமன்ற கூட்டம் நடைபெறும் காரணத்தால் டெல்லியில் இருக்கக்கூடிய நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர் பாலுவிற்கு பிரதி அனுப்பபட்டதாக தெரிவித்தார். உடனடியாக சம்பந்தப்பட்ட அமைச்சரை சந்தித்து நம்முடைய எதிர்ப்பை நான் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை நீங்கள் அவரிடத்தில் தரவேண்டும் என தான் உத்தரவிட்டதாக கூறினார். தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியது போல் சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சர் வெளியூரில் இருக்கின்ற காரணத்தால் உடனடியாக சந்திக்க இயலவில்லை.
நானும் டெல்டா காரன் தான்
டி.ஆர் பாலு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது தமிழ்நாடு முதலமைச்சர் அளித்த கடிதத்திற்கு நிச்சயம் மதிப்பளிப்போம் கவலைப்பட வேண்டாம் என ஒன்றிய அமைச்சர் சொன்னதாக டி ஆர் பாலு என்னிடம் சொல்லியுள்ளார். நிச்சயமாக சொல்கிறேன் முதலமைச்சராக மட்டுமல்ல நானும் டெல்டா காரன் எனவே இதில் உறுதியாக இருப்பேன். நீங்கள் எப்படி உறுதியாக இருக்கிறார்களோ அதில் நானும் உறுதியாக இருப்பேன் எந்த காரணத்தைக் கொண்டும் தமிழ்நாடு அரசு நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதி அளிக்காது அளிக்காது அளிக்காது என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி பட தெரிவித்தார்.