கடுமையாக்கப்படும் ஊரடங்கு? தளர்வுகள் நீக்கம்? அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முதல்வர் ஆலோசனை.!

By vinoth kumarFirst Published May 13, 2021, 5:57 PM IST
Highlights

கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால் மருத்துவமனைகளில் படுக்கைகள் தேவை அதிகரித்து வருகிறது. ஆகையால், நோய் தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு கூடுதல் படுக்கைகள் ஏற்படுத்தி வருகின்றன. 

கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக சட்டமன்றக் கட்சி தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில், திமுக சார்பில் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாராதி, அதிமுக சார்பில் ஜெயக்கமார், வேடசந்தூர் பரமசிவம், காங்கிரஸ் சார்பில் விஜயதாரணி, முனிரத்தினம், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

அப்போது, பேசிய முதல்வர் ஸ்டாலின்;- போர்க்கால அடிப்படையில் மக்களை பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கில் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. எனது தலைமையிலான அரசில் வெளிப்படைத்தன்மை இருக்கும் என ஏற்கனவே கூறியிருந்தேன். அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைகளைப் பெறவே இந்த கூட்டத்தில் இணைந்திருக்கிறோம். ஒடிஷா, மேற்கு வங்கத்தில் இருந்து ஆக்சிஜன் கொண்டுவர மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்பட்டு பலன் கிடைத்துள்ளது. அரசின் பல்வேறு முயற்சியால் ஆக்சிஜன் செறிவூட்டிகள் பெறப்பட்டு வருகின்றன. சிங்கப்பூர், தைவான் நாடுகளில் இருந்து ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர்கள் வரவழைக்கப்படுகின்றன.

ரெம்டெசிவிர் மருந்தின் தேவை கருதி சென்னை மட்டுமின்றி மற்ற நகரங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இரவு பகல் பாராமல் கொரோனா தடுப்புப் பணிகளுக்கென கட்டளை மையம் தொடங்கப்பட்டது. கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால் மருத்துவமனைகளில் படுக்கைகள் தேவை அதிகரித்து வருகிறது. ஆகையால், நோய் தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு கூடுதல் படுக்கைகள் ஏற்படுத்தி வருகின்றன. 

கொரோனா பணிகளில் ஈடுபடும் மருத்துவத் துறையினருக்கு ஊக்கத் தொகையை அரசு அறிவித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான  கட்டணத்தை தமிழக அரசே ஏற்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து தடுப்பூசி இறக்குமதி செய்ய சர்வதேச ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. முழு ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு தளர்வுகளை நீக்கலாமா அல்லது மாற்றம் செய்யலாமா என்பதை கட்சி பிரதிநிதிகள் கூறலாம்  என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

click me!