மருத்துவ படிப்பில் ஓபிசி-க்கு 50% இட ஒதுக்கீடு..! ஹைகோர்ட் தீர்ப்புக்கு சபாஷ் போட்ட முதல்வர் பழனிசாமி

By karthikeyan VFirst Published Jul 27, 2020, 8:29 PM IST
Highlights

மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக முதல்வர் பழனிசாமி வரவேற்றுள்ளார்.
 

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்புகளில் 15% இடங்களும் மருத்துவ மேற்படிப்புகளில் 50% இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது. 

மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட(ஓபிசி) பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அரசு தரப்பில் மட்டுமல்லாது, தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் ஆளுங்கட்சியான அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. 

அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு(ஓபிசி) இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு சட்டம் இயற்றலாம். இட ஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும் என்ற இந்திய மருத்துவ கவுன்சில் வாதத்தை ஏற்க முடியாது. மத்திய அரசின் கல்வி நிலையங்கள் அல்லாத கல்வி நிலையங்களிலும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரீதியாகவோ அரசியலமைப்பு ரீதியாகவோ எந்தவிதமான  தடையும் இல்லை. மருத்துவக் கவுன்சில் விதிகளில் மாநில இட ஒதுக்கீடு பின்பற்றக் கூடாது என எந்த விதிகளும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்பதாக தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் பழனிசாமி, சமூகநீதி காத்த அம்மாவின் ஆசியுடன் சிறப்பாக மக்கள் பணியாற்றும் அம்மாவின் அரசு எடுத்த சட்ட ரீதியான நடவடிக்கையினால், மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களின் சேர்க்கைக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வரவேற்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சமூகநீதி காத்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் சிறப்பாக மக்கள் பணியாற்றும் அம்மாவின் அரசு எடுத்த சட்ட ரீதியான நடவடிக்கையினால், மருத்துவ படிப்பில் OBC மாணவர்களின் சேர்க்கைக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வரவேற்கிறேன்.

— Edappadi K Palaniswami (@CMOTamilNadu)
click me!