எதிர்க்கட்சிகளின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது.. ஸ்டாலினின் தொடர் விமர்சனத்துக்கு முதல்வர் பழனிசாமியின் செம பதிலடி

By karthikeyan VFirst Published Apr 17, 2020, 2:23 PM IST
Highlights

கொரோனா விவகாரத்தில் தங்களை முன்னிலைப்படுத்தி கொள்ள வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது என்று முதல்வர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
 

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன. ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து தொடர்ந்து தாறுமாறாக உயர்ந்துவந்த நிலையில், கடந்த 3-4 நாட்களாக கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்ட போதிலும், பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 3 நாட்களில் 5000க்கும் அதிகமானோர் பரிசோதிக்கப்பட்டுள்ள நிலையில் வெறும் 94 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகியுள்ளது. அதேபோல குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. 

அரசு தரப்பில் கொரோனா தடுப்பு பணிகளும், சிகிச்சை பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது. ஆனாலும் எதிர்க்கட்சிகளின் தரப்பில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மீது தொடர் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், அரசின் நடவடிக்கைகள் மந்தமாகவும் தெளிவற்ற தன்மையிலும் இருப்பதாக தொடர்ந்து விமர்சித்துவருகிறார். இந்நிலையில், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில், நோயில் அரசியல் செய்யும் அவலம் தமிழ்நாட்டில் மட்டுமே நிலவுவதாகவும் அரசின் தடுப்பு நடவடிக்கைகளை புள்ளிவிவரத்துடன் விவரித்தும் முதல்வர் பழனிசாமி நேற்று பதிலடி கொடுத்திருந்தார்.

இந்நிலையில், இன்றும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சரிவர செய்யவில்லை என்று விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். எதிர்க்கட்சிகளை அழைத்து ஆலோசிக்க வேண்டும் என்ற ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களின் கோரிக்கைக்கு ஆளும் அதிமுக அரசு செவிமடுக்காததன் விளைவாக, ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ச்சியாக அதிமுக அரசை விமர்சித்துவருகின்றன.

இந்நிலையில், தனது சொந்த மாவட்டமான சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்திய முதல்வர் பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எதிர்க்கட்சிகளுக்கு தக்க பதிலடி கொடுத்தார். 

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து பேசிய முதல்வர் பழனிசாமி, கொரோனா மருத்துவம் சார்ந்த பிரச்னை. அதனால் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு அவர்களுடன் ஆலோசனை நடத்தி, அவர்களின் ஆலோசனைப்படியும், மத்திய சுகாதாரத்துறை மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்களின்படியும் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

கொரோனா விவகாரத்தில் அரசியல் தலைவர்கள் ஆலோசனை வழங்க என்ன இருக்கிறது? ஒன்றுமே இல்லை. ஆனாலும் எதிர்க்கட்சிகள் தங்களை முன்னிலைப்படுத்தி கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மட்டுமே செயல்படுகின்றனர். அவர்கள் மக்கள் மீதான அக்கறையிலோ கொரோனாவிலிருந்து மீள வேண்டும் என்ற எண்ணத்திலோ அரசை விமர்சிக்கவில்லை. இதுவரை ஒரு ஆரோக்கியமான ஆலோசனையை கூட எதிர்க்கட்சிகள் வழங்கவில்லை. இக்கட்டான சூழலில் எதிர்க்கட்சிகள், இந்த நோயை வைத்து அரசியல் செய்வது வருத்தமளிக்கிறது. ஆனால் கொரோனா விவகாரத்தில் தங்களை முன்னிலைப்படுத்தி கொள்ள நினைக்கும் எதிர்க்கட்சிகளின் நோக்கம் ஒருபோதும் நடக்காது என்று முதல்வர் பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
 

click me!