‘இன்னும் எத்தனை உயிர்களை மோடி பலி கேட்கிறார்’ - முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசம்....!!!

First Published Dec 8, 2016, 5:54 PM IST
Highlights


மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வௌியாகி ஒருமாதம் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை 100 பேர் வரை மக்கள் பலியாகி உள்ளனர். இன்னும் எத்தனை உயிர்களை மோடி அரசு பலி கேட்கிறது என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ேமற்கு வங்காள மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது-

மத்திய அரசு செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை வெளியிட்டு ஒரு மாதம் ஆகியுள்ளது. கடந்த ஒரு மாதமாக, மக்கள் தேவைக்கு வங்கிகள், ஏ.டி.எம்.களில்பணம் எடுக்க முடியாமல், வேதனைப்படுகின்றனர். மிகுந்த மன உளைச்சலில் இருக்கின்றனர். பணம் இருந்தும் பாதுகாப்பற்ற சூழல் இருப்பதாகக் கருதுகின்றனர்.

தற்போது நாட்டில் நிலவும் சூழல் குறித்து பிரதமர் மோடி மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும். இந்த சூழலுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.

கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்று எடுக்கப்பட்ட இந்த முடிவால், இதுவரை எந்த கருப்பு பணமும் மீட்கப்படவில்லை. மக்களின் பணம்தான் பறிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து எந்தவிதமான கருப்பு பணமும் மீட்கப்படவில்லை.கருப்பு பணத்தை மீட்கிறேன் என்ற பெயரில், மத்தியில் ஆளும் அரசு நிலம், வங்கி டெபாசிட், தங்கம், வைரம் என சொத்துக்களாக சேர்த்து வருகிறது.

கடந்த ஒரு மாதத்தில் இதுவரை 100 பேர்வரை ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின் அந்த பாதிப்புகளால் இறந்துள்ளனர். இன்னும் பிரதமர் மோடி எத்தனை மக்களின் உயிரை பலி கேட்கிறார்?

நாட்டில் தொழிற்சாலைகளின் உற்பத்தி குறைந்துவிட்டது, வேளாண் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன, வாங்குவதும், விற்பதும் சரிந்து, பொருளாதாரம் ஒழுங்கற்று இருக்கிறது. அறிவிக்கப்படாத நிதி அவசரநிலையை உண்டாக்கி இருக்கிறது மத்தியஅரசு.

முறைசாரா தொழில்களான தேயிலை தோட்டம், பீடி தொழிலாளர்கள், சணல் தொழிலில் ஈடுபட்டுள்ளோர், வேலைக்கு செல்வோர், மாணவர்கள், நோயாளிகள், முதியோர் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சமானிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.குடும்பத்தில்  அம்மாக்களும், சகோதரிகளும் தங்களின் சிறுசேமிப்பை கட்டாயமாக எடுத்து குடும்பத்தை நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  இந்த துரதிருஷ்டமான நிலை எப்போது முடிவுக்கு வரும் என யாருக்கும் தெரியவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

click me!