தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தியது ஏன்..? எந்த விவரமும் இல்லாத முதல்வரின் விவர அறிக்கை

First Published May 29, 2018, 1:04 PM IST
Highlights
chief minister explanation report about tuticorin firing


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி, சட்டசபையில் விவர அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.

மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்காக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அப்போது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விவர அறிக்கையை முதல்வர் பழனிசாமி தாக்கல் செய்தார்.

அதில், 144 தடை உத்தரவை மீறி, அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு போராட்டக்காரர்களுடன் சில அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் இணைந்துகொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் ஸ்டெர்லைட் ஆலையையும் முற்றுகையிட்டு சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தின. இக்கூட்டத்தில் சிலர் ஊடுருவி, காவல்துறையினரை விரட்டி தாக்கியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மீது கற்களை வீசி தாக்கியும், அரசுத்துறை வாகனங்களை தீயிட்டு கொளுத்தியும் கலவரத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், வன்முறையை கட்டுக்குள் கொண்டுவரவும், பொதுமக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்கவும், பொதுச்சொத்துக்கள் சேதமடைவதை தடுக்கவும், கலவரக்காரர்களை தடுப்பதற்காகவும் போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அப்போதும் வன்முறை கட்டுக்குள் வராததால் தடியடி நடத்தப்பட்டது. அதன்பிறகு தவிர்க்க முடியாத சூழ்நிலையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டனர் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் வழங்கப்பட்ட நிதியுதவி குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த விவர அறிக்கையில், துப்பாக்கிச்சூடு என்ற வார்த்தையே பயன்படுத்தப்படவில்லை. மேலும் துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை, வன்முறையில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆகிய விவரங்களும் இடம்பெறவில்லை. இதை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் சுட்டிக்காட்டினார்.
 

click me!