
நீட் தேர்வில் தேர்ச்சி பெறாததையடுத்து மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. இவர் தந்தை சண்முகம், திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழில் செய்துவருகிறார். ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்த அனிதா, ப்ளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றார்.
இவரது கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 196.7. நீட் தேர்வு எழுதிய அனிதாவின் கட்-ஆஃப் 700-க்கு 86 மதிப்பெண் மட்டுமே கிடைத்தது.
இந்த நிலையில், மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காததால், மாணவி அனிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரின் உடல் அஞ்சலிக்காக குழுமூரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மாணவர்கள் அமைப்பினர் எதிர்கட்சியினர் என பலரும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மத்திய மாநில அரசுகளே அனிதாவின் மரணத்திற்கு காரணம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதில் அனிதா மரணம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.