
தமிழகத்தில் மரங்களை அழித்ததே பட்டாளி மக்கள் கட்சியினர் தான் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியிருக்கிறார். பாமகவின் மரம் நடும் திட்டம் குறித்து கருத்து தெரிவித்த அவர் இயற்கை வளங்களை சூறையாடியது பாமக தான் என கூறினார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில், 30 கோடியே 83 லட்ச ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ள 48 புதிய திட்டப் பணிகளுக்கு, அடிக்கல் நாட்டினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதலமைச்சர் தமிழ்நாட்டில் இயற்கை வளம் குறைந்தது, பாமகவினரால் தான் என்பது எல்லோருக்கும் தெரியும் என்றார். எத்தனை திமுக வந்தாலும் கட்சியையும், ஆட்சியையும் கலைக்கும் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. மேலும் அழகிரி-ஸ்டாலின் மோதல் உட்கட்சி பிரச்சனை. பிற கட்சியில் ஏற்படும் பிரச்சனைகளை வைத்து அரசியல் செய்ய அதிமுக தயாராக இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் முக்கொம்பு கொள்ளிடம் அணையில் சேதம் அடைந்த பகுதி இன்னும் முன்று தினங்களில் சரி செய்யப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். அணை முழுமையாக உடைய உள்ளதாக கூறப்படுவது தவறான தகவல் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.