உலக அதிசயம்டா சாமி ! மோடியைப் பாராட்டிய சிதம்பரம் .. கி.வீரமணி !!

By Selvanayagam PFirst Published Aug 16, 2019, 9:56 PM IST
Highlights

சுதந்திர தின விழா உரையாற்றிய பிரதமர் மோடி, குடும்பக் கட்டுப்பாட்டின் மூலம் இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவுவது, பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவது போன்ற 3 அறிவிப்புகளை முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

இந்தியாவின் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். 

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், குடும்பக் கட்டுப்பாடுதான் உண்மையான தேசப்பற்று என்றும், சிறிய குடும்பம் மூலம் வளர்ச்சிக்கு பங்களிப்பவர்கள் தேசப் பற்றை வெளிப்படுத்துபவர்கள் என்று குறிப்பிட்டார்.


 
மேலும் அக்டோபர் 2ஆம் தேதியன்று இந்தியாவை பிளாஸ்டிக் இல்லாத நாடாக மாற்ற உறுதியேற்போம்…. செல்வங்களை உருவாக்குவது தேசிய சேவை. அதைச் செய்வோரை சந்தேகத்துடன் பார்க்கக்கூடாது. செல்வம் உருவாக்கப்பட்டால் தான் அதனை அனைவருக்கும் விநியோகிக்க முடியும்  என்று தெரிவித்திருந்தார்.

மோடியின் இந்த அறிவிப்பை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி வெளியிட்ட மூன்று அறிவிப்புகளை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும்.
 
1. சிறு குடும்பம் என்பது தேசபக்தி கடமை, 2. செல்வங்கள் உருவாக்குபவர்களை மதிக்க வேண்டும், 3.ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக்குகளை தவிர்க்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

இதே போல் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “1930 களிலேயே தந்தை பெரியாரும், அவர்தம் அரசியல் சாரா சுயமரியாதை இயக்கமும் இந்தியாவிலேயே முதன்முதலில் கர்ப்ப ஆட்சி - குடும்பக் கட்டுப்பாடு என்பதை கொள்கை வேலைத் திட்டமாகப் பிரச்சாரம் செய்தார். 

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையில், இந்த அம்சம் வலியுறுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்..

click me!