முத்தலாக் சட்டம்.. சேப்பாக்கம் தொகுதி.. முஸ்லீம் பெண்கள் வாக்கு... காய் நகர்த்தும் குஷ்பு..!

By Selva KathirFirst Published Dec 30, 2020, 3:42 PM IST
Highlights

வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட பாஜகவிடம் சேப்பாக்கம் தொகுதியை நடிகை குஷ்பு உறுதி செய்துள்ளதோடு பணிகளையும் தொடங்கியுள்ளார்.

வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட பாஜகவிடம் சேப்பாக்கம் தொகுதியை நடிகை குஷ்பு உறுதி செய்துள்ளதோடு பணிகளையும் தொடங்கியுள்ளார்.

அதிமுக கூட்டணி என்றால் சில தொகுதிகள் பாஜகவிற்கு என்று அந்த கட்சி ஏற்கனவே ஒரு பட்டியலை அதிமுக தலைமையிடம் கொடுத்துள்ளது. கன்னியாகுமரி, விளவங்கோடு, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி வரிசையில் சேப்பாக்கம் தொகுதியையும் பாஜக தங்களுக்கு வழங்க வேண்டும் என்று அதிமுகவிடம் பேசி வருகிறது. இதற்கிடையே அந்த சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட நடிகை குஷ்பு முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக பாஜக தலைமையிடம் அவர் பேசி முடித்துவிட்டதாகவும் அவர் பாஜகவில் இணையும் போதே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில் குஷ்பு சேப்பாக்கம் தொகுதியில் களம் இறங்க உள்ளார். முதலில் மயிலாப்பூர்தொகுதியில் போட்டியி குஷ்பு விரும்பியதாக தகவல் வெளியானது. ஆனால் குஷ்பு சேப்பாக்கம் தொகுதிக்கே குறி வைத்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. குஷ்பு முஸ்லீமாக இருந்து இந்துவாக மாறி சுந்தர் சியை கரம்பிடித்தவர். அந்த வகையில் சேப்பாக்கம் தொகுதியில் அதிக முஸ்லீம்கள் உள்ளதால் குறிப்பாக முஸ்லீம் பெண்களை குறி வைத்து குஷ்பு இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக சொல்கிறார்கள். நிச்சயம் முஸ்லீம் ஆண்கள் தன்னை ஆதரிக்கவில்லை என்றாலும் பெண்களின் ஆதரவு தனக்கு கிடைக்கும் என்று கருதுகிறார்.

இதற்கு காரணம் முத்தலாக் தடைச் சட்டம் என்கிறார். பிரதமர் மோடியின் முத்தலாக் தடைச் சட்டம் நாடு முழுவதும் முஸ்லீம் பெண்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்க கூடிய பகுதிகளில் பாஜகவிற்கு அதிக வாக்குகள் கிடைத்தன. இதற்கு அந்த பகுதி முஸ்லீம் பெண்கள் மோடி கொண்டு வந்த முத்தலாக் தடைச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததே காரணம் என்று சொல்லப்பட்டது. இதனை நம்பியே சேப்பாக்கம் பகுதியில் உள்ள முஸ்லீம் பெண்களின் வாக்குகளை கவர்ந்துவிட்டால் போதும் கூட்டணி பலம் மற்றும் நடிகை என்கிற கவர்ச்சி தனக்கு வெற்றியை தேடித்தரும் என்று அவர் நினைக்கிறார்.

எனவே தான் தற்போதே சேப்பாக்கம் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் குஷ்பு. மேலும் சேப்பாக்கம் தொகுதியில் அதிமுக வலுவாக உள்ளது. திருவல்லிக்கேணி பகுதியில் பாஜக ஆதரவு வாக்குகள் கணிசமாக உள்ளன. எனவே மயிலாப்பூரை விட சேப்பாக்கம் தனக்கு சேஃபாக இருக்கும் எனறு குஷ்பு கணக்கு போட்டுள்ளார். சேப்பாக்கத்தை குஷ்புவுக்கு வழங்க பாஜக ஒத்துக் கொண்டது ஓகே ஆனால் அந்த தொகுதியை பாஜகவிற்கு வழங்க அதிமுக ஒத்துக் கொள்ள வேண்டுமே?

click me!