நிம்மதி பெருமூச்சு விட்ட சென்னை வாசிகள்.. ஊரடங்கு தளர்வுகளால் துள்ளி குதிக்கும் மக்கள்.!!

By T BalamurukanFirst Published Jul 6, 2020, 7:32 AM IST
Highlights

இந்த நிலையில், சென்னைக்கு மட்டும் இன்று முதல் தனியாக சில தளர்வுகளும், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தனியாக சில தளர்வுகளையும் அறிவித்திருக்கிறார் தலைமைச்செயலாளர் சண்முகம். 


தமிழகத்தில் சென்னையில் கொரோனா பரவல் காட்டுத்தீ போல் கட்டுக்கடங்காமல் தாக்கியதை தொடர்ந்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.கொரோனா பரவலை தடுப்பதற்காக தற்போது 6-வது கட்டமாக வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னைக்கு மட்டும் இன்று முதல் தனியாக சில தளர்வுகளும், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தனியாக சில தளர்வுகளையும் அறிவித்திருக்கிறார் தலைமைச்செயலாளர் சண்முகம். 


இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் சம்பந்தப்பட்ட 4 மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பிய

கடிதத்தில்...

 ஐ.டி. நிறுவனங்கள் 50 சதவீத தொழிலாளர்களுடன் (அதிகபட்சம் 80 நபர்கள்) இயங்கலாம். அவர்களுக்கு ஐ.டி. நிறுவனங்களே வாகன வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

 மேலும், அனைத்து தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனங்கள் 50 சதவீதம் ஊழியர்களுடன் இயங்கலாம். வணிக வளாகங்களை தவிர்த்து அனைத்து வகையான ஷோரூம்கள், பெரிய கடைகள்(ஜவுளி மற்றும் நகைக் கடைகள்) 50சதவீத தொழிலாளர்களுடன் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம். ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகள் காலை 6 மணி முதல் 9 மணி வரை உணவுகளை பார்சல் வழங்கலாம். போன்கள் மூலம் பெறப்படும் ஆர்டர்களுக்கு வீடுகளுக்கு கொண்டு கொடுக்கும் சேவையை இரவு 9 மணி வரை மேற்கொள்ளலாம். உணவு கொண்டு வழங்குபவர்கள் தங்கள் நிறுவனத்தின் அடையாள அட்டையை பெற்று பணியாற்ற வேண்டும்.

 காய்கறி மற்றும் மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்து இருக்கும். டாக்சிகளில் ஓட்டுனர் தவிர்த்து 3 நபர்கள் பயணிக்கலாம். ஆட்டோக்களில் ஓட்டுனர் தவிர்த்து 2 பேர் பயணிக்கலாம். சைக்கிள் ரிக்‌ஷாக்களும் அனுமதிக்கப்படுகிறது. முடி திருத்தும் நிலையங்கள், ‘ஸ்பா‘ மற்றும் அழகு நிலையங்கள் ஏ.சி. போடாமல் இயங்கலாம். மீன் கடைகள், கோழிக்கறி மற்றும் இறைச்சி கடைகள் சமூக இடைவெளியை கடைபிடித்து இயங்கலாம். கோவில்கள் அடுத்த உத்தரவு வரும் வரை திறக்கப்படாது. மதம் சார்ந்த கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது.

செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் தளர்வுகள்...
 கிராமப்புறங்களில் ஆண்டு வருமானம் 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக உள்ள கோவில்கள், மசூதிகள், தர்காக்கள், தேவாலயங்கள் திறக்கப்படலாம். அனைத்து வகையான தொழிற்சாலைகளும், ஏற்றுமதி நிறுவனங்களும் 100 சதவீதம் தொழிலாளர்களுடன் இயங்கலாம். ஐ.டி. நிறுவனங்கள் 100 சதவீதம் தொழிலாளர்களுடன் இயங்கலாம். அதில், குறைந்தபட்சம் 20 சதவீதத்தினர் வீடுகளில் இருந்து பணிகளை பார்க்கலாம்.

 தனியார் நிறுவனங்கள் 100 சதவீதம் தொழிலாளர்களுடன் இயங்கலாம். வணிக வளாகங்களை தவிர்த்து அனைத்து வகையான ஷோரூம்கள், பெரிய கடைகள் ஏ.சி. இயக்காமல் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம். 5 வாடிக்கையாளரே ஒரு நேரத்தில் கடைக்குள் அனுமதிக்கப்பட வேண்டும். டீ கடைகள், ரெஸ்டாரண்டுகள் மொத்த இருக்கையில் 50 சதவீத இருக்கைகளில் சமூக இடைவெளியுடன் செயல்படலாம். வாடகை கார்களில் ஓட்டுனர் தவிர்த்து 3 நபர்கள் பயணிக்கலாம். ஆட்டோக்களில் ஓட்டுனர் தவிர்த்து 2 பேர் பயணிக்கலாம். சைக்கிள் ரிக்‌ஷாக்களும் அனுமதிக்கப்படுகிறது. மீன் கடைகள், கோழிக்கறி மற்றும் இறைச்சி கடைகள், முட்டை கடைகள் சமூக இடைவெளியை கடைபிடித்து இயங்கலாம்.
 

click me!