கொரோனா: தமிழ்நாட்டிற்கு குறைவான நிதி ஒதுக்கியது ஏன்..? மத்திய அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

By karthikeyan VFirst Published Apr 8, 2020, 3:00 PM IST
Highlights

கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு, இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டிற்கு குறைவான நிதி ஒதுக்கியது ஏன் என விளக்கமளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. 
 

கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் 5200க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், சமூக தொற்றாக பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துவரும் நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்த ஆலோசனை நடந்துவருகிறது. 

இந்தியாவை பொறுத்தமட்டில் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. மகாராஷ்டிராவில் 1000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக, கடும் பாதிப்பை சந்தித்துவரும் மாநிலம் தமிழ்நாடு. ஆரம்பத்தில் மிகவும் நார்மலாக இருந்த தமிழ்நாட்டில், கடந்த ஒரு வாரத்தில் தினம் தினம் பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டிய நிலையில், நேற்று நிலவரப்படி 690 பேர் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிராவிற்கு அடுத்த இரண்டாமிடத்தில் தமிழ்நாடு உள்ளது. அதற்கடுத்தடுத்த இடங்களில் டெல்லி, உத்தர பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் உள்ளன.

இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துவரும் நிலையில், கொரோனாவை எதிர்கொள்ள மத்திய அரசு, தமிழ்நாட்டிற்கு ரூ.9000 கோடி ஒதுக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி, இரண்டு முறை பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் மத்திய அரசு, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கு ரூ.510 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. 

தமிழ்நாட்டுடன் ஒப்பிடுகையில் குறைவான பாதிப்படைந்துள்ள உத்தர பிரதேசம் மாநிலத்திற்கு ரூ.960 கோடியும் மத்திய  பிரதேசத்திற்கு ரூ.910 கோடியும் ஒடிசாவிற்கு ரூ.800 கோடியும் ஒதுக்கியுள்ள நிலையில், பாதிப்பு அதிகமாகவுள்ள தமிழ்நாட்டிற்கு குறைவான நிதி ஒதுக்கியது குறித்து விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு ஒன்றை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாநிலங்களுக்கு அதிகமான நிதியை ஒதுக்கியுள்ள மத்திய அரசு, கொரோனா பாதிப்பில் இரண்டாமிடத்தில் உள்ள தமிழ்நாட்டிற்கு, வெறும் ரூ.510 கோடி மட்டுமே ஒதுக்கியது ஏன்? எனவும் கொரோனா பாதிப்பு குறைவான மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கியது ஏன் எனவும் கேள்வி எழுப்பினர். 

மேலும் இதுகுறித்து இரண்டு வாரங்களில் மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 

click me!