மருத்துவர்கள், செவிலியர்களின் சேவைலாம் வேற லெவல்.. ஊதியத்தை அதிகமா கொடுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

By karthikeyan VFirst Published Apr 10, 2020, 3:35 PM IST
Highlights

மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், காவல்துறையினர், துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் செய்யும் சேவைக்கு நிகரான ஊதியம் வழங்கப்படுவதில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 
 

கொரோனா இந்தியாவில் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவரும் நிலையில், ஊரடங்கு அமலில் இருப்பதால் நாடே வீட்டில் முடங்கியிருக்கும் இந்த சூழலிலும் இரவு பகல் பாராமல் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் களத்தில் இறங்கி பணிபுரிந்துவருகின்றனர்.

குறிப்பாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் சேவை அபரிமிதமானது. மருத்துவ உலகிற்கு சவாலாக திகழும் இந்த கொரோனாவுக்கு எதிராகவும் கொரோனாவை தடுத்து விரட்டவும் நோயாளிகளுக்கு 24 மணி நேரமும் சிகிச்சையளிக்கும் அளப்பரிய சேவையை மருத்துவர்களும் செவிலியர்களும் செய்துவருகின்றனர்.

துப்புரவு பணியார்கள், காவல்துறையினரும் களத்தில் இறங்கி மக்களுக்காக பணியாற்றிவருகின்றனர். அனைவரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள வீடுகளில் முடங்கியுள்ள இந்த இக்கட்டான, நெருக்கடியான சூழலில் சுயநலமில்லாமல் பொதுநலத்துடன் களத்தில் இறங்கி மக்கள் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், காவல்துறையினர், துப்புரவு பணியாளர்களின் சேவை அளப்பரியது. 

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் அரசு தரப்பில் எடுக்கப்பட்டாலும், மக்களுக்காக இரவு பகலாக உழைக்கும் அவர்களின் நலனில் அக்கறை கொண்டு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது பொதுவான கருத்தாகவே உள்ளது. 

இந்நிலையில், கொரோனா டெஸ்ட்டை இலவசமாக செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், காவல்துறையினர், துப்புரவு பணியாளர்கள் ஆகியோரின் சேவை பாராட்டுக்குரியது. ஆனால் அவர்களின் சேவைக்கேற்ற ஊதியம் வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கான ஊதியத்தை மத்திய, மாநில அரசுகள் உயர்த்தி வழங்கும் என நம்புகிறோம் என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. 

மருத்துவர்களுக்கான முழு பாதுகாப்பு உடைகள், மாஸ்க்குகள் ஆகியவையும் பரிசோதனை உபகரணங்களும் போதுமான அளவு கையிருப்பு உள்ளதாக தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
 

click me!