முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதும் போடப்பட்ட வழக்கில், மணிகண்டன் கைதாகி 68 நாட்கள் ஆன நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நடவடிக்கையில் அடையாறு போலீசார் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நடவடிக்கையில் மகளிர் போலிசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.நடிகை அளித்த பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது கட்டாயக் கருக்கலைப்பு மற்றும் பாலியல் பலாத்காரம் செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் வழக்கிற்கான உரிய ஆதாரங்களை திரட்டி கடந்த ஜூன் மாதம் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பெங்களூரில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். முன்னாள் அமைச்சர் மணிகண்டனை இரண்டு நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர். வழக்கின் முக்கிய ஆதாரமான மணிகண்டனின் 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே குற்றம்சாட்டிய நடிகை மற்றும் வழக்கில் நடிகைக்கு கருக்கலைப்பு செய்ததாக கூறப்படும் மருத்துவர் அருண்குமார் உள்ளிட்ட சாட்சிகளிடம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது.
தற்போது சென்னை காவல்துறை பதிவு செய்த பாலியல் குற்றச்சாட்டில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதும் போடப்பட்ட வழக்கில், மணிகண்டன் கைதாகி 68 நாட்கள் ஆன நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நடவடிக்கையில் அடையாறு போலீசார் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக சைபர் ஆய்வகத்தின் இறுதி அறிக்கை வந்தவுடன் நீதிமன்றத்தில் இன்னும் சில நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நிபந்தனை ஜாமினில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.