என்னதான் நாங்கள் அறிக்கை அளித்தாலும் பள்ளி திறப்பதில் முதல்வர் முடிவு இதுதான்.. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்.!

By vinoth kumarFirst Published Oct 3, 2021, 11:03 AM IST
Highlights

இது குழந்தைகளின் உடல்நலம் சம்பந்தப்பட்ட விஷயம் என்று முதல்வர் கூறினார். மருத்துவ வல்லுநர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகே பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார். 

நீங்கள் என்னதான் அறிக்கை அளித்தாலும், மருத்துவ வல்லுநர்கள் என்ன சொல்கிறார்களோ, அதன் அடிப்படையில்தான் முடிவு எடுக்க முடியும் என முதல்வர் கூறியதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதையடுத்து கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் 9-12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக 1-8ம் வகுப்பு மாணவர்களுக்கும் நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. 

இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ்;- நவம்பர் 1ம் தேதி 1-8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பதில் தற்போதுவரை எந்தவித மாற்றமும் இல்லை. திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும். பள்ளிகள் திறப்பு குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஒவ்வொரு மாதிரியான கருத்துக்களை அறிக்கையாக அளித்திருந்தனர். இதை நான் முதல்வரிடம் வழங்கியபோது அவர் சொன்னது ஒன்று தான். நீங்கள் என்னதான் அறிக்கை அளித்தாலும், மருத்துவ வல்லுநர்கள் என்ன சொல்கிறார்களோ, அதன் அடிப்படையில்தான் முடிவு எடுக்க முடியும்.

 ஏனெனில் அவர்கள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில்தான் ஊரடங்கு குறித்த முடிவும் எடுக்கப்படுகிறது. இது குழந்தைகளின் உடல்நலம் சம்பந்தப்பட்ட விஷயம் என்று முதல்வர் கூறினார். மருத்துவ வல்லுநர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகே பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார். அதனால், அதில் எந்தவித மாற்றமும் இல்லை. ஒரு வகுப்பறையில் 20 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் வெகுநேரம் முகக்கவசம் அணிந்திருக்க முடியாது என்பதால், அதுதொடர்பாக பின்னர் ஆய்வு செய்து அறிவிக்கப்படும் என்று கூறினார்.

click me!