யோகிக்கு மோடி.. அகிலேஷுக்கு சந்திரசேகர் ராவ்.. பீஸ்ட் மோடில் உபி தேர்தல் களம் !!

By Raghupati RFirst Published Jan 21, 2022, 12:00 PM IST
Highlights

தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவரும் ஆன சந்திரசேகர ராவ், அகிலேஷூக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

உத்தரப் பிரதேசம் உள்ளட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 4 மாநிலங்களில் பாஜக ஆளும் கட்சியாக இருப்பதாலும், நாட்டின் மிக முக்கியமான மாநிலமான உ.பி.யில் தேர்தல் என்பதாலும் பாஜகவுக்கு மிகவும் முக்கியமான தேர்தலாக கருதப்படுகிறது.

உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கும் தேர்தல் மார்ச் 7ம்தேதி வரை நடக்கிறது.  அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி, ராஷ்டிரிய லோக் தள் மற்றும் ராஜ்பாரின் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 3 அமைச்சர்கள் உள்ளிட்ட பல பாஜக எம்.எல்.ஏக்கள் அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகி அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர்.

பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என்றே கருத்து கணிப்புகள் கூறுகின்றன. அதேநேரத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி பாஜகவுக்கு நெருக்கடி தரும் வகையில் கணிசமான இடங்களை அள்ளும் என்றும் அந்த கருத்து கணிப்புகள் சுட்டிக் காட்டுகின்றன. உத்தரப்பிரதேச தேர்தலில் இந்த முறை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பெருமுயற்சி செய்து வருகிறார். 

2017 தேர்தலில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட அகிலேஷ், அதை இந்தத் தேர்தலில் எந்த இடத்திலும் செய்யாமல் அனைத்து தவறுகளையும் திருத்திக்கொண்டு வருகிறார். இம்மாநில சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை.அக்கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்க்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நடந்த முடிந்த மேற்குவங்க சட்டசபை தேர்தலில் மம்தாவிற்கு ஆதரவாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் நேரில் பிரசாரம் செய்தார். 

இதற்கு கைமாறாக அகிலேஷ் யாதவ்க்கு ஆதரவாக மம்தா பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவரும் ஆன சந்திரசேகர ராவ், அகிலேஷூக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

click me!