இனி மீண்டும் மோடி பிரதமர் ஆகக்கூடாது ! எதிர்கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டும் நாயுடு காரு !!

By Selvanayagam PFirst Published May 18, 2019, 9:14 PM IST
Highlights

அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக இன்று காலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சரத்பவார் ஆகியோரை சந்தித்த ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு, தொடர்ந்து உத்தரவிரதேச முன்னாள் முதலமைச்சர்கள் அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி ஆகியோரை சந்தித்துப பேசினார்.

பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சி அமைப்பதை தடுப்பதற்கு காங்கிரஸ் கட்சியும், பாஜகவை  எதிர்க்கும் மாநில கட்சிகளும் தீவிரமாக ஆலோசனை நடத்த தொடங்கி உள்ளன.

இதன் முதல் கட்டமாக காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளை ஓர் அணியில் திரட்டும் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தொடங்கப்பட்ட தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மாநில கட்சிகள் அனைத்தையும் காங்கிரசுடன் கை கோர்க்க வைக்க கடந்த மாதம் முதல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இடையில் அவரது பேச்சுவார்த்தையில் சற்று தொய்வு ஏற்பட்டது.

தற்போது அவர் மீண்டும் தனது வியூகத்தை தீவிரப்படுத்த தொடங்கி இருக்கிறார். நேற்று அவர் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரியை சந்தித்து பேசினார். பிறகு ஆம்ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

தேர்தல் முடிவுகள் வெளியாகும் 23-ந்தேதி மாலை எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரையும் டெல்லியில் திரள செய்ய வேண்டும் என்ற இலக்குடன் சந்திரபாபு நாயுடு முக்கிய கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை அவர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். அப்போது தேர்தல் முடிவுகள் வெளியானதும் எத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

மாநில கட்சிகளில் எந்தெந்த கட்சிகள் தங்கள் அணிக்கு உடனடியாக வரும்? என்றும் அவர்கள் ஆலோசித்தனர். அதன் அடிப்படையில் அடுத்தக் கட்டமாக எந்தெந்த தலைவர்களை சந்தித்து பேச வேண்டும் என்றும் அவர்கள் முடிவு செய்தனர்.

ராகுலை சந்தித்த பின்னர் இன்று பிற்பகல் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார். இன்று மாலை லக்னோ வந்த அவர் உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதலமைச்சரும்  சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அடுத்தகட்டமாக, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியை சந்தித்து பேசினார். மேற்கு வங்காளம் மாநில முதலமைச்சரும்,  திரினாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை சந்திரபாபு நாயுடு விரைவில் சந்திக்க உள்ளார்

click me!