நாற்காலிகளால் ஒருவரை ஒருவர் சரமாரியாக அடித்துக் கொண்ட அதிமுகவினர்…. அமைச்சர் முன்பு அதிரடி!!

By Selvanayagam PFirst Published Nov 14, 2018, 7:08 AM IST
Highlights

திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொண்டர்கள் நாற்காலிகளால் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக  சார்பில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் மகாலில் நடந்தது. இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பேசினர்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மருதராஜ் பேசிக்கொண்டு இருந்தபோது, ஒருவர் எழுந்து, தொப்பம்பட்டி ஒன்றியத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் நியமிக்கப்பட்ட விவகாரத்தில், அதிமுகவினர் கொடுத்த பட்டியலில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப் படவில்லை.

தி.மு.க.வை சேர்ந்தவர்கள் கொடுத்த பட்டியலில் உள்ளவர்களுக்கு தான் அதிக பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த கூட்டுறவு சங்க தேர்தலிலும் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தான் அதிக அளவு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதற்கு அ.தி.மு.க.வினரும் உடந்தையாக செயல்பட்டுள்ளனர், என்று குற்றம்சாட்டினார்.

அப்போது குறுக்கிட்ட மாவட்ட செயலாளர் மருதராஜ், இது கட்சி தொடர்பான ஆலோசனை கூட்டம். இது மாதிரி புகார்களை தனியாக பேசிக்கொள்ளலாம், என்று அமைதிப்படுத்த முயன்றார். ஆனால் அந்த நபர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறிக்கொண்டே இருந்தார். அவரை அருகில் இருந்த நிர்வாகிகள் சிலர் சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது நிர்வாகிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் தள்ளுமுள்ளு ஏற்பட்டு நிர்வாகிகள் மோதிக்கொண்டனர். அப்போது சிலர் நாற்காலிகளை வீசி எறிந்து ரகளையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தொப்பம்பட்டி ஒன்றியத்தில் இருந்து வந்திருந்த நிர்வாகிகள் பலர் கூட்டத்தை புறக்கணித்து அங்கிருந்து வெளியேறினர்.

அமைச்சர் முன்னிலையிலேயே இந்த மோதல் நடந்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

click me!