
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நாளை மாற்றம் செய்யப்பட உள்ளது. இதில் பல புதிய முகங்களுக்கு அமைச்சர் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் மாற்றம்
கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சியமைத்ததும் பிரதமர் மோடி தலைமையில் 41 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அதன்பின், அந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.
மனோகர் பாரிக்கர்
இதனிடையே கோவா சட்டசபைத் தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றதையடுத்து, பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர், கோவா முதல்வராக பொறுப்பேற்றார். இதனால், அவர் வகுத்து வந்த பாதுகாப்பு துறை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வசம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.
மேலும், சுற்றுச்சூழல்துறை அமைச்சராக இருந்த அணில் தாவே மரணமடைந்ததையடுத்து, அவரின் துறை ஹர்ஸ்வர்தன் வசம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.
துணை ஜனாதிபதி
மேலும், நகர்புறமேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த வெங்கையா நாயுடு துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் அவர் வகித்து வந்த துறையும் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்ருமிருதி இராணி,நரேந்திரசிங் தோமர் ஆகியோருக்கும் கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் செயல்பாடு
மேலும், பல்வேறு முக்கிய துறைகளை மூத்த அமைச்சர்களிடம் கூடுதல் சுமையாக கொடுக்க பிரதமர் மோடி விரும்பவில்லை என கூறப்படுகிறது.இதுபோல் பல அமைச்சர்களின் செயல்பாடுகளும் திருப்திகரமாக இல்லாததால் அவர்களை கட்சிப் பணிக்கு மாற்றவும் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
வருகிற 2019-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களில் கட்சியை பலப்படுத்துவதற்காக மத்திய அமைச்சர்கள் பலர் கட்சிப் பணிக்கு அனுப்பப்பட உள்ளனர்.
ஆலோசனை
இது தொடர்பாக மத்திய அமைச்சரவையை மாற்றி அமைப்பது தொட பாக பா.ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷாவுடன், பிரதமர் மோடி தீவிர ஆலோசனை நடத்தினார்.
ராஜினாமா
இதையடுத்து, இணை அமைச்சர்களாக இருந்த ராஜீவ் பிரதாப் ரூடி, சஞ்சவ் குமார்பல்யான், பகான் சிங் குலாஸ்தே, மகேந்திரநாத் பாண்டே ஆகியோர் நேற்று ராஜினாமா செய்தார்கள். அவர்களைத் தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர்உமாபாரதி, கல்ராஜ் மிஸ்ராவும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
யாருக்கு வாய்ப்பு?
இந்நிலையில் புதிய அமைச்சர்கள் பட்டியலில் பா.ஜனதா பொதுச்செயலாளர்பூபேந்திர யாதவ், துணைத் தலைவர் வினய் சகஸ்ரபுத்தே, பிரகலாத் பட்டீல், சுரேஷ் அங்கடி, சத்யபால் சிங், பிரகலாத் ஜோஷி ஆகியோரின் பெயர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் அமைச்சரவையில் பங்குகொள்ளும் என்று தெரிகிறது.இதனால், அந்த கட்சியைச் சேர்ந்த ஆர்.சி.பி. சிங், சந்தோஷ் குமார் ஆகியோருக்கு அமைச்சர் வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது.
அதிமுக வாய்ப்பு பெறுமா?
அதிமுகவும் பா.ஜனதா கூட்டணியில் சேர்வதாக இருந்தால், அல்லது முடிவு செய்தால், துணை சபாநாயகர் தம்பித்துரை, பி. வேணுகோபால், வி. மைத்ரேயன்ஆகியோருக்கும் அமைச்சர் வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால், இது குறித்து எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வரவில்லை.
தற்போது பிரதமர் மோடியின் அமைச்சரவையில் 73 அமைச்சர்கள் உள்ளனர். மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 15 சதவீதத்துக்கு அதிகமில்லாமல் அமைச்சர்கள் இருக்கலாம். அதன்படி, 81 அமைச்சர்கள் வரை இருக்கலாம்.