செம்மொழி தமிழாய்வு மையத்தில் அரசியல்..! மத்திய அமைச்சரின் ரஜினி துதி..! டென்சனில் முதலமைச்சர் அலுவலகம்..!

By vinoth kumarFirst Published Jun 8, 2020, 4:57 PM IST
Highlights

சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மையத்தின் இயக்குனர் நியமனத்தில் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நடிகர் ரஜினிகாந்தை முன்னிலைப்படுத்தி வெளியிட்ட அறிவிப்பு தமிழக முதலமைச்சர் அலுவலகத்தை டென்சன் ஆக்கியுள்ளதாக சொல்கிறார்கள்.

சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மையத்தின் இயக்குனர் நியமனத்தில் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நடிகர் ரஜினிகாந்தை முன்னிலைப்படுத்தி வெளியிட்ட அறிவிப்பு தமிழக முதலமைச்சர் அலுவலகத்தை டென்சன் ஆக்கியுள்ளதாக சொல்கிறார்கள்.

சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மையத்திற்கு இயக்குனர் நியமிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வந்தன. இந்த நிலையில் கடந்த வாரம் இந்த மையத்தின் இயக்குனராக சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார். ஆனால் இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்டது தான் சர்ச்சையானது. ஏனென்றால் இது தொடர்பான அறிவிப்பை மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

அந்த ட்வீட்டில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியோடு நடிகர் ரஜினிகாந்தின் பெயரையும் அமைச்சர் டேக் செய்திருந்தார். இது தான் சர்ச்சைக்கு காரணம். ஏனென்றால் மத்திய அரசு தனது அலுவல் சார்ந்த ஒரு அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்ட நிலையில் அதில் எவ்வித அரசுப் பொறுப்பிலும் இல்லாத ரஜினியின் பெயர் இடம்பெற்றது பல்வேறு கேள்விகளை எழுப்பின. இதுகுறித்து மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடம் சிலர் விளக்கம் கேட்டனர்.

அதற்கு தமிழகம் சார்ந்த ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிலையில் அம்மாநிலத்தில் பிரபலமாக உள்ள ஒருவரை டேக் செய்தால் எளிதில் பலரை சென்றடையும் என்கிற எண்ணத்தில் தான் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அப்படி செய்ததாக விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்பிற்கு நன்றி தெரிவித்து ரஜினி உடனடியாக அமைச்சருக்கு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட மத்திய அமைச்சர், தமிழ் மொழியை வலுப்படுத்த மோடி அரசு அயராது உழைத்து வருவதாக கூறியிருந்தார். இந்த ரஜினியின் கடிதம் தமிழகத்தில் தலைப்புச் செய்தியாகிவிட்டது.

மேலும் சந்திரசேகரன் நியமனத்தில் ரஜினியின் தலையீடு இருந்ததா என்கிற ரீதியில் கேள்விகள் முன் வைக்கப்பட்டன. சீமான் கொதித்து எழுந்து அறிக்கை வெளியிட்டார். ஆனால் இந்த விஷயத்தில் தமிழக அரசு மிக மவுனமாக இருந்தது. நீண்ட நாட்களாக காலியாக இருந்த ஒரு முக்கிய பதவியை மத்திய அரசு நிரப்பியுள்ளது. வழக்கமாக இது போன்ற முக்கிய பணி நியமனங்களுக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் தரப்பில் இருந்து மத்திய அமைச்சர்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்படும்.

ஆனால் இந்த விஷயத்தில் தமிழக அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை. இதற்கு காரணம் செம்மொழி தமிழாய்வு மைய இயக்குனர் நியமனத்தில் தேவையில்லாமல் மத்திய அமைச்சர் ரஜினியின் துதி பாடிவிட்டார் என்று கருதியது தான் என்கிறார்கள். மேலும் இப்படி அரசு நியமனம் சார்ந்த விஷயங்களில் ரஜினிக்கு முக்கியத்துவம் அளிப்பதை தமிழக அரசு விரும்பவில்லை என்றும் சொல்கிறார்கள். எனவே இது குறித்து என்ன அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கலாம் என முதலமைச்சர் அலுவலகம் ஆலோசித்து வருவதாகவும் பேச்சுகள் அடிபடுகின்றன.

click me!