
வரும் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள 2018-19ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில்மகாத்மா ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு(எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ்.) நிதியை 20 சதவீதம் அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் அல்லது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்பது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தில் கிராமத்தில் உள்ள ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலையை உறுதி செய்வதாகும். இதில் நாடுமுழுவதும் கிராமங்களில் 11 கோடி மக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.
இந்த திட்டம் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தபோதும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், வரும் பிப்ரவரி மாதம் தாக்கலாகும் 2018-19ம் ஆண்டு பட்ஜெட் பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் கடைசி முழுமையான பட்ஜெட் ஆகும். ஏனென்றால் 2019ம் ஆண்டு தேர்தல் வரும் என்பதால், அப்போது செலவினத்துக்கான பட்ஜெட் மட்டுமே தாக்கலாகும்.
இந்த சூழலில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு கடந்த நிதியாண்டு ரூ.48 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், வரும் நிதியாண்டில் அதை 20 சதவீதம் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கிராமங்களில் அதிக அளவு வேலைவாய்ப்புகளை பெருக்கமுடியும் என அரசு நம்புகிறது. இந்த கூடுதல் தொகையில் 21 சதவீதம் சாலை அமைப்புக்கும், 11 சதவீதம் குளம், ஏரி, குட்டைகளை சீரமைக்கவும், வறட்சி பகுதியில் மக்களுக்கு வேலை வழங்க 6 சதவீதமும் ஒதுக்கப்படுகிறது.