தமிழக அரசின் வாழ்வாதார செயல்பாட்டு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு பாராட்டு..!! அமைச்சர் எஸ்.பி வேலுமணி பெருமிதம்

By Ezhilarasan BabuFirst Published May 27, 2020, 7:24 PM IST
Highlights

நலிவுற்றோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மேம்பாடு நிதி மூலம் , விதவைகள், மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் மலைவாழ் மக்கள் அடங்கிய 30,000 பயனாளிகளுக்கு ரூபாய் 17.5 57 கோடி வழங்கப்பட்டுள்ளது

மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் மூலமாக தரமான குறைந்த விலையில்  1. 2 கோடி முகக் கவசங்கள் தயாரித்து வினியோகிக்கப்பட்டுள்ளது எனவும்,  மேலும் கூடுதலாக ஒரு கோடி முகக் கவசங்கள் தயாரித்து வழங்கபடும் எனவும் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான ஆலோசனை கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ் .பி வேலுமணி அவர்கள் தெரிவித்துள்ளார்.  தமிழக நகர்ப்புறம் மற்றும் ஊராட்சி உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு ,பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. 

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சாலை பணிகள், குளங்கள் பராமரிப்பு பணிகள் குறித்தும்,  நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்மிகு நகர திட்டம்,  அம்ரூத் திட்டம் குறித்தும் பேரூராட்சிகளின் இயக்கத்தின் சார்பில்,  குடிநீர் திட்டப்பணிகள் சாலை பணிகள்,  தெருவிளக்குகள்,  அனைவருக்கும் வீடுகள் போன்ற பணிகளின் நிலை குறித்தும்,  ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்,  பசுமை வீடு திட்டம்,  பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், போன்ற வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். 

மேலும் சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் நாள்தோறும் வழங்கப்பட்டு வரும் குடிநீர் குறித்தும்,  அடைப்புகள் உள்ள குழாய்களை புதுப்பிக்கும் நடவடிக்கை குறித்தும், கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகள் குறித்தும் ,  நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குடிநீர் வினியோகம் மற்றும் திட்டப்பணிகள் குறித்தும்,  தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் சுய உதவி குழுக்களுக்கு சிறப்பு கடனுதவி வழங்கும் நிலை,  மற்றும் புத்தாக்க பயிற்சி,  புத்தக பராமரிப்பு குறித்தும்,  அம்மா இரு சக்கர வாகனம் திட்டத்தின் மூலம்,  2019-20 முடிய உள்ள நிலுவை இலக்கு மற்றும் 2020-21 ஆண்டு இலக்கை அடைய எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும்,  துறை சார்ந்த அலுவலர்களிடம் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் விரிவாக கேட்டறிந்து பணிகளை விரைந்து முடித்திட உத்தரவிட்டார்.  மேலும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்,  துறை சார்பில் 2019-20 ஆம் ஆண்டில் 300 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் குளங்கள் மற்றும் குட்டைகள் மேம்படுத்தும் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி பணிகளை இம்மாத இறுதிக்குள் விரைந்து முடித்து பணிகளை துரிதமாக செயல்படுத்தவும் உத்தரவிட்டார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலின்படி கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மகளிர் சுய உதவி குழுக்களின் மூலமாக,  முகக் கவசங்கள், கிருமிநாசினிகள் மற்றும் கைகழுவும் திரவம் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக இதுநாள்வரை 88,11,345 முகக்கவசங்கள் 1,57,509 லிட்டர் கிருமிநாசினிகள், 94,457 லிட்டர் கை கழுவும் திரவம் ஆகியவை தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் மூலம் 14.33 லட்சம் முகக் கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தூய்மை காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் இதுவரை 7,61,230 எண்ணிக்கையில் முதல் கவசங்களும் 12,850 லிட்டர் கிருமினாசினியும் 28,547 லிட்டர் கை கழுவும் திரவ சோப்பும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கூடுதலாக தரமான குறைந்த விலையில் ஒருகோடி முகக்கவசங்கள் தயாரித்து வழங்கவும் கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.  இதுவரை  மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ஏப்ரல் 2020 முதல் 23-5-2020 வரை 1704 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது . கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு தொடர்பான அரசின் நடவடிக்கைகளில் 66,833 க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுவினர் தன்னார்வத்துடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இதுவரை கிராம அளவில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை 19,792 சுய உதவி குழு உறுப்பினர்கள் 8.45 லட்சம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்துள்ளனர்.நலிவுற்றோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மேம்பாடு நிதி மூலம் , விதவைகள், மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் மலைவாழ் மக்கள் அடங்கிய 30,000 பயனாளிகளுக்கு ரூபாய் 17.5 57 கோடி வழங்கப்பட்டுள்ளது எனவும் கிராமப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பு திட்டம் மூலம் ஊரக பகுதிகளில் உள்ள பயிற்சி பெற்று 540 இளைஞர்கள் அரசு மருத்துவமனைகளில் நலவாழ்வு பணியாளர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.

ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் மூலம் அதிக எண்ணிக்கையில் 14.33 லட்சம் முகக் கவசங்கள் தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு அகில இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழக அரசு வாழ்வாதார இயக்கத்தின் செயல்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பாக திறன் பிரிவில் இருந்து பாராட்டு கடிதம் வரப் பெற்று அதில் உரிய நேரத்தில் மாநில அரசை அழைத்து கவுரவிப்பார்கள் என மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி அவர்கள் தெரிவித்தார்.

 

click me!