பிப்ரவரி 1-ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்....வரும் 29-ல் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடக்கம்....

First Published Jan 5, 2018, 9:00 PM IST
Highlights
central Budget on february 1st.Arun Jaitly


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 29ந்தேதி தொடங்கும் என்றும், 2018-19ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல் ெசய்யப்படும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது.

புதிய முறை

கடந்த 2016ம் ஆண்டில் இருந்து பட்ஜெட் தாக்கல் முறையில், புதிய முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. வழக்கமாக பிப்ரவரி இறுதியில் தாக்கல் செய்யப்பட்டு வந்த பட்ஜெட்மாற்றப்பட்டு, பிப்ரவரி முதல் தேதியிலேயே தாக்கல் செய்யப்பட்டது. மேலும், ரெயில்வேக்குதனியாக இருந்த பட்ஜெட் நீக்கப்பட்டு, மத்திய பட்ஜெட்டுடன் இணைத்து தாக்கல் செய்யப்பட்டது.

காரணம்

மத்திய அரசில் உள்ள பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு விரைவாக கிடைக்க வேண்டும், அதன் மூலம் திட்டப்பணிகள் விரைந்து நடக்க வேண்டும் என்பதற்காக பட்ஜெட் தாக்கல் தேதிகள் மாற்றப்பட்டன.

ஜி.எஸ்.டி.க்கு பின்

மிக முக்கியமாக, கடந்த ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) அறிமுகம் செய்யப்பட்ட பின் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும் என்பதால், மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் மறைமுக வரிகள் அனைத்தும் ஜி.எஸ்.டி.வரம்புக்குள் வரும் என்பதால், புதியதாக வரி விதிப்பு இருக்குமா? என்ற சந்தேகம் எழுகிறது.

நிறைவு பெற்றது

குஜராத், இமாச்சலப் பிரதேச தேர்தலை காரணம் காட்டி குளிர் காலக் கூட்டத் தொடரும் தாமதமாகத் தொடங்கி, நேற்று முடிந்துவிட்டது.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் தேதி குறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

29ந்தேதி தொடக்கம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 29-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி வரை நடக்கிறது. 2018-19ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் பிப்ரவரி 1-ந் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.

2 பிரிவுகள்

பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி ஜனவரி 29-ந் தேதி தொடங்கி பிப்ரவரி 9ந்தேதிவரையிலும், 2-ம் பகுதி மார்ச் 5-ந் தேதி முதல் ஏப்ரல் 6-ந்தேதி வரையிலும் நடக்கும்.  2018-19ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்வார்.

ஜனாதிபதி உரை

இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், இரு அவைகளையும் ஒன்றாக கூட்டி வைத்து கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவார். அன்றைய தினமே பொருளாதார ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடைசி முழு பட்ஜெட்

வரும் பட்ஜெட் கூட்டத் தொடர் என்பது மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தாக்கல் செய்யும் கடைசி முழுமையான பட்ஜெட் ஆகும். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பொதுத் தேர்தல் வந்துவிடும் என்பதால், செலவினத்துக்கான இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என்பதால், இந்த பட்ஜெட்டில்மக்களுக்கான பல கவர்ச்சித் திட்டங்கள், புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருக்கிறது.

அனல்பறக்கும் விவாதம்

அது மட்டுமல்லாமல், நாட்டில் நிலவும் வேலையின்மை, பொருளாதார சரிவு, ஜி.எஸ்.டி. குளறுபடி, கிராமங்களில் நிலவும் சிக்கல்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பட்ஜெட் கூட்டத்தில் எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

முத்தலாக் விவாதம்

மேலும், முத்தலாக் தடை மசோதா மக்களவையில் மட்டும் நிறைவேறி இருக்கிறது, மாநிலங்கள் அவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது ஆனால், நிறைவேற்றப்படவில்லை. ஆதலால் பட்ஜெட் கூட்டத்தொடரில் முத்தலாக் தடை மசோதா குறித்து விவாதிக்கப்படும். 

திரிபுரா, மேகாலயா தேர்தல்

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்க உள்ளதால், அந்த மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்க பா.ஜனதா அரசு புதிய சலுகைகளை ஏதேனும் அறிவிக்கலாம். திரிபுராவில் இடது சாரி ஆட்சியும், மேகாலயாவில் காங்கிரஸ் ஆட்சியும் நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது. 

click me!