
கோயமபுத்தூர்
“மத்தியிலுள்ள பா.ஜ.க அரசு பிரித்தாளும் நயவஞ்சக ஆட்சி நடத்துகிறது. பொய் பிரச்சாரம் செய்கிறது” என்று கோவை வடக்கு மாவட்ட காங்கிரசு தலைவர் வி.எம்.சி.மனோகரன் பேசினார்.
கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் நகர காங்கிரசு குழு சார்பில் பெருந்தலைவர் காமராஜர் 115–வது பிறந்தநாள் விழா, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 73–வது பிறந்தநாள் விழா, சூலூர் எஸ்.வி. இலட்சுமணன் 98–வது பிறந்தநாள் விழா, 2021–ல் நவீன இந்தியா, மற்றும் ஆகஸ்டு புரட்சி 75–ஆம் ஆண்டு விழா ஆகிய ஐம்பெரும் விழா சூலூர் எஸ்.ஆர்.எஸ் திருமண மண்டபத்தில் நேற்று நடைப்பெற்றது.
இந்த விழாவிற்கு நகர காங்கிரசு தலைவர் எஸ்.பி. சந்திரசேகர் தலைமை வகித்தார். மேடையில் வரலாற்றுத் தலைவர்களின் படங்கள் திறந்து வைக்கப்பட்டன. இந்த விழாவில் கோவை வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி. மனோகரன் பங்கேற்றார்
அப்போது அவர் பேசியது: “முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி உலக அரங்கில் இந்தியாவை தலை நிமிரச் செய்தார். தொழில் துறையில் நிலை நிறுத்தினார்.
இன்று மத்தியிலுள்ள பா.ஜனதா அரசு பிரித்தாளும் நயவஞ்சக ஆட்சி நடத்துகிறது. பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். இதனால் பொருளாதார வளர்ச்சியில் நாடு 25 ஆண்டுகளுக்கு பின்னோக்கித் தள்ளப்பட்டுவிட்டது. தொழில் பின்னடைவு, வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்கி உள்ளது.
காமராஜரின் ஆட்சியை கொண்டு வருவோம் என்று சொல்வதை விடுத்து, அதை நடைமுறைப்படுத்த முனைப்புடன் நாம் செயல்பட வேண்டும்.
இந்தப் பகுதியின் பிரச்சனைகள் குறித்து மத்திய, மாநில அரசுகளிடம் முறையிட உரிமைகளைக் கேட்டுப் பெற எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் முன் வரவில்லை.
நமது தொகுதி எம்.எல்.ஏ நொய்யல் ஆற்றை தூய்மைப்படுத்த நமது பகுதியில் உள்ள குளங்களை மேம்படுத்த, மில், நெசவு, விசைத்தறித் தொழில்களைக் காக்க முன் வந்து தனது கடமையை சரியாக செய்ய தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவேண்டும்” என்று அவர் பேசினார்.
இந்த விழாவில் ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டனர்.