சொந்த கட்சியிலேயே பிரபலமானவர்களை தேடும் திமுக..! கலக்கத்தில் மூத்த நிர்வாகிகள்... அப்போ வாரிசுகளின் நிலை?

By Selva KathirFirst Published Jul 11, 2020, 10:42 AM IST
Highlights

திமுகவில் வார்டு, கிராம அளவில் பிரபலமாக இருக்க கூடியவர்களை அடையாளம் கண்டு அனுப்புமாறு அக்கட்சி தலைமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை நிர்வாகிகளை கலக்கம் அடைய வைத்துள்ளது.

திமுகவில் வார்டு, கிராம அளவில் பிரபலமாக இருக்க கூடியவர்களை அடையாளம் கண்டு அனுப்புமாறு அக்கட்சி தலைமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை நிர்வாகிகளை கலக்கம் அடைய வைத்துள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வரும் திமுக, வாக்கு வங்கியை தக்க வைக்கவும், புதிய வாக்காளர்களை கவரவும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. முன்பு போல் மாவட்டச் செயலாளர்களுடன் கட்சி செயல்பாடுகள் குறித்து விவாதிப்பதை கடந்த சில மாதங்களாக திமுக தலைமை மாற்றிக் கொண்டுள்ளது. வார்டு, கிராம அளவில் உள்ள திமுக நிர்வாகிகளுடன் கூட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதற்காக அனைத்து நிர்வாகிகளின் செல்போன் எண் உள்ளிட்ட விவரங்கள் ஏற்கனவே சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திடீரென திமுக தலைமையிடம் இருந்து மாவட்டச் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கை வெளியாகியுள்ளது. அதிலும் உள்ளூரில் பிரபலமாக இருக்கும் கட்சி உறுப்பினர்களின் விவரங்களை கட்சித் தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக குறைந்தது 20 பேரிடமாவது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நபராக அந்த பிரபலமான திமுக பிரமுகர் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இந்த பிரபலமான திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது கலந்துரையாடுவார் என்றும் எனவே அந்த நபரை கவனமாக தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவரை தொடர்பு கொள்ள முறையான செல்போன் எண்ணை குறிப்பிட வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சொந்த கட்சியிலேயே பிரபலமானவர்களை தேடிக் கொண்டிருக்கிறது திமுக. அப்படி என்றால் திமுகவில் தற்போது பொறுப்புகளில் இருப்பவர்கள் பிரபலமானவர்கள் இல்லையா? கட்சியில் வார்டு செயலாளர் முதல் தலைமை நிலைய செயலாளர் வரை பொறுப்புகள் எதற்கு என்று கேள்விகள் எழுந்துள்ளன.

கட்சியின் செயல்பாடு, வளர்ச்சி நிலவரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கத்தானே பொறுப்பாளர்கள் அப்படி இருக்கையில் திடீரென இப்படி பிரபலமானவர்களை திமுக தலைமை தேடுவது ஏன்? ஒருவேளை பொறுப்பாளர்களை ஓரங்கட்டப்போகிறார்களா? என்று திமுக நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர். கட்சியின் ஒன்றியச் செயலாளராக நான் இருக்கும்போது என் ஒன்றியத்தில் இருந்து தலைவர் ஒருவருடன் நேரடியாக பேசினால் எனக்கு என்ன மரியாதை என்று இப்போதே திமுகவில் சில நிர்வாகிகள் கவலை அடைய ஆரம்பித்துள்ளனர். இப்படி பிரபலமானவர்களை நாங்களே அடையாளம் காட்டினால் எங்கள் வாரிசுகளின் நிலை என்ன? என்றெல்லாம் கவலை அடைய ஆரம்பித்துள்ளனர்.

மேலும் திமுக இப்படி திடீர் நிலைப்பாடு எடுக்க காரணம் தங்கள் நிர்வாகிகள் மீதான நம்பிக்கை குறைந்துவிட்டது தானா? என்றும் கேள்விகள் எழுகின்றன. ஆனால் நிர்வாகிகளுக்கு நிகராக ஒவ்வொரு கட்சிஅமைப்பிலும் பிரபலமானவர்களை அடையாளம் காண்பதன் மூலம் கட்சியை வலுப்படுத்தி வாக்கு வங்கியை விரிவாக்க முடியும் என்று திமுக நம்புகிறது. ஆனால் சொந்த கட்சியிலேயே பிரபலமானவர்களை தேடும் ஒரே தலைமை நம் தலைமை தான் என்றும் கட்சிக்குள்ளேயே விமர்சனங்கள் எழுகின்றன.

இதனிடையே, இந்த வேலைகள் அனைத்தும் ஐபேக் நிறுவனத்தின் ஆலோசகர் பிரசாத் கிஷோரின் சொல்படியே நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதனால், மூத்த நிர்வாகிகள் பல கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக தனது குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், சில நிர்வாகிகள் ஐபேக் நிறுவனம் வகுத்துள்ள இந்த மாஸ்டர் திட்டத்துக்குக் கட்சியினர் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்கிற கேள்வியும் இப்போதே எழுந்துள்ளது. ஒன்றிணைவோம் வா திட்டத்திலேயே ஆட்களைச் சேர்க்கப் படாத பாடுபட்ட கதையை இப்போதும் சொல்லி நொந்துபோகிறார்கள்.

click me!