காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகும் இரண்டு பிரபலங்கள் !! பாஜகவில் இணையும் நடிகை !!

By Selvanayagam PFirst Published Sep 30, 2019, 7:30 AM IST
Highlights

காங்கிரசிலிருந்து விலகி, பிரபல நடிகை விஜயசாந்தியும், முன்னாள் கிரிக்கெட் வீரர்  அசாருதீனும்  விலகுகின்றனர். விஜயசாந்தி பாஜகவிலும், அசாருதீன் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியுலும் இணைய உள்ளனர்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர், விஜயசாந்தி. முதலில், பா.ஜ.,வில் சேர்ந்த விஜயசாந்தி, பின், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியில் சேர்ந்தார். கடந்த, 2009 மக்களவைத் தேர்தலில், மேடக் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

இதன் பின், 2014ல், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியிலிருந்து விலகி, காங்கிரசில் சேர்ந்தார். 2014ல் நடந்த, தெலுங்கானா சட்டசபை தேர்தலில், மேடக் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.


கடந்த ஆண்டு நடந்த தெலுங்கானா சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததையடுத்து, கட்சி பணிகளில் இருந்து விலகிய விஜயசாந்தி, மீண்டும், திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர், பாஜகவில் சேரப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது  குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயசாந்தியின் கணவர்  சீனிவாச பிரசாத் ,விஜயசாந்தி இப்போது, திரைப்பட ஷூட்டிங்கில் உள்ளார். பா.ஜ.,வில் சேருவது பற்றி, அவர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. ''ஆனால், அதற்கான ஆலோசனை உள்ளது. இதற்கு முன், பாஜகவில்  இருந்ததால், அந்த கட்சி யில் அவர் சேர்ந்தால் ஆச்சர்யமில்லை என கூறினார்.

இதே போல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், முகமது அசாருதீன், 2009ல், காங்கிரசில் சேர்ந்தார். 2009 மக்களவைத் தேர்தலில், உ.பி., மாநிலம், மொராதாபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த, 2014 தேர்தலில், ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மதப்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

அண்மையில்  நடந்த, ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் தேர்தலில் போட்டியிட்டு, அசாருதீன் வெற்றி பெற்றார். இவரது வெற்றிக்கு, ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் ஆதரவு காரணம் என, கூறப்படுகிறது. 

இதையடுத்து, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியில் சேர, அசாருதீன் முடிவு செய்துள்ளார். இதற்காக, முதலமைச்சர்  சந்திரசேகர ராவை சந்திக்க, அசாருதீன் நேரம் கேட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

click me!