
தேசியத் தலைவர் பி.கே. மூக்கையா தேவரின் நூற்றாண்டு விழாவினை அரசு விழாவாக நடத்த வேண்டும் என அதிமுக வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என சொல்லில் மட்டுமின்றி செயலிலும் செய்து காட்டிய பெருமைக்குரிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் அரசியல் வாரிசும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு நடத்தப்பட்ட முதல் பொதுத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியிலிருந்தும், 1957, 1962, 1967, 1971 மற்றும் 1977 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் உசிலம்பட்டி தொகுதியிலிருந்தும் தொடர்ச்சியாக ஆறு முறை அகில், இந்திய பார்வர்டு பிளாக் கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு திறப்பட மக்கள் பணியாற்றிய வரும், தற்காலிக பேரவைத் தலைவராக பணியாற்றிய அனுபவம் பெற்றவரும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்புற பணியாற்றியவருமான மறைந்த தியாகி பி.கே.மூக்கையாதேவரின் நூற்றாண்டு துவக்க விழா 04-04-20222 அன்று துவங்க இருக்கிறது.
மூக்கையாத் தேவர் மாணவப் பருவத்திலிருந்தே பொதுக் காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டு, நீதிக்கும். நேர்மைக்கும்,நியாயத்திற்கும் போராடியவர். ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் கள்ளர் இனத்தைச் சார்ந்தவர்கள் குற்றப் பிரிவினராக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அதனை ஒழித்து, அந்த இனத்தினுடைய பாரம்பரிய பெருமைகளை வெளிக் கொணர்ந்து, அவர்களின் உயர்வுக்கு வழி வகுத்தப் பெருமை மூக்கையா தேவருக்கு உண்டு. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை போலவே ஒரே சமயத்தில் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவர் மூக்கையா தேவர்.
கச்சத்தீவு இலங்கை நாட்டிற்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்டபோது, அதனை மக்களவையில் முன்வைத்தவர் மூக்கையா தேவர். கச்சத்தீவு எதிர்த்து வலுவான வாதங்களைகுறித்து அவர் ஆற்றிய உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. கல்விப் பணியில் இவர் ஆற்றிய பங்கு போற்றத்தக்கது. சாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்து, உசிலம்பட்டி, நீலித்தினல்லூர், கமுதி ஆகிய இடங்களில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரில் இவர் நிறுவிய கல்லூரிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவச கல்வி, தங்கும் வசதி, உணவு ஆகியவை வழங்கப்பட்டன. எனவே அவரது நூற்றாண்டு விழாவை தமிழக அரசு, அரசு விழாவாக நடத்த வேண்டும். அவர் பிறந்த ஊரில் உள்ள பள்ளிக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.