
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கபினி மற்றும் கே,ஆர்.எஸ் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கபினி அதன் கொள்ளவை விரைவில் எட்டும் என்பதால் அந்த அணையில் இருந்து விநாடிக்கு 35 ஆயிரம் கன அடி உபரி நீர் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீர் இன்று மாலை தமிழக எல்லையான பிலிகுண்டுவை வந்தடையும் என எதிர்ப்க்கப்படுகிறது.
காவிரியில் தமிழகத்துக்கு சேர வேண்டிய தண்ணீரைத் திறந்துவிடும்படி தொடர்ந்து கர்நாடகாவுக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டது. உச்சநீதி மன்றமும் தண்ணீர் திறந்துவிடும்படி உத்தரவிட்டது.
ஆனால் கடந்த மாதம் முதலமைச்சராக இருந்த சித்த ராமையா மற்றும் தற்போதைய முதலமைச்சர் குமாரசாமி ஆகிய இருவருமே காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுத்துவிட்டனர்.
இந்நிலையில் கர்நாடகத்தில் தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக காவிரியின் பிறப்பிடமான குடகு மாவட்டத்தில் பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த 6 நாட்களுக்கும் மேலாக அங்கு இடைவிடாது கனமழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதேபோல் காவிரியின் கிளை ஆறான லட்சுமண தீர்த்த நதியிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழையால் குடகு மாவட்டமே ஸ்தம்பித்து உள்ளது. இந்த நிலையில் நேற்றும் குடகு மாவட்டத்தில் இடைவிடாது கனமழை கொட்டியது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் வரலாறு காணாத அளவில் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், அப்பி மல்லலி உள்பட பல்வேறு நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதேபோல், சிக்கமகளூரு மாவட்டத்திலும் கடந்த 7 நாட்களாக தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் துங்கா, பத்ரா, ஹேமாவதி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக கபினி அணை தனது முழுகொள்ளளவை எட்டுவதற்கு இன்னும் 7 அடியே உள்ளது.
அணைக்கு தற்போது வினாடிக்கு 37 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 35 ,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் இன்று மாலை தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணையை சென்றடையும் என்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர வாய்ப்பு உள்ளது.
தமிழக அரசியல் கட்சிகள், விவசாயிகள், உச்சநீதிமன்றம் என அனைத்துத் தரப்பும் கேட்டுக் கொண்டும் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடகா தற்போது இயற்கையின் சீற்றத்தை தாங்க முடியாமல், வேறு வழியில்லாமல் காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டுள்ளது.