கடைமடை பகுதிக்கு இன்னும் வந்து சேராத காவிரி நீர்…..பொதுப்பணித்துறை அதிகாரிகளை அமைச்சர் முன்னிலையில் வறுத்தெடுத்த விவசாயி !!

By Selvanayagam PFirst Published Aug 17, 2018, 12:44 PM IST
Highlights

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும், லட்சக்கணக்கான கனஅடி நீர் வீணாக கடலில் கலந்தும் காவிரி டெல்டா மாவட்டங்களில் கடைமடைப் பகுதிகள் இன்னும் காய்ந்து போயிருப்பதாகவும். இந்த அதிகாரிகளும், அரசும் என்ன செய்து கொண்ருக்கிறது ?  என அமைச்சர் விஜய பாஸ்கர் முன்னிலையிலேயே விவசாயி ஒருவர் வறுத்தெடுத்துவிட்டார்

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்ததால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 23-ந் தேதி மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.



இந்த நிலையில் கர்நாடகாவில் மீண்டும் பருவமழை பெய்து வருவதால் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் மேட்டூர் அணை 2-வது முறையாக நிரம்பியது. இதையடுத்து மேட்டூரில் இருந்து 1 லட்சத்து 14 ஆயிரம் கன அடி தண்ணீர் பாசனத்துக்காக திறந்துவிடப்படுகிறது.



இந்த நிலையில் காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளம் கரைபுரண்டு சென்றாலும் கடைமடை பகுதிகளுக்கு இதுவரையிலும் தண்ணீர் செல்லவில்லை என்று டெல்டா விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.



குறிப்பாக தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், திருவாரூரில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, பேரளம், மற்றும் நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, திருமருகல்  பிதுக்கோட்டை மாவட்டம் நாகுடி உள்ளிட்ட  கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை. கொள்ளிடத்தில் இருந்து தண்ணீர் வீணாக கடலுக்கு செல்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேட்டூர் அணை திறக்கப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும்  இதுவரை கடைமடை தண்ணீர் செல்லாததற்கு வாய்க்கால், ஏரி, குளங்களை பொதுப்பணித்துறையினர் தூர்வாராததே காரணம் என்று விவசாயிகள் குமுறி வருகின்றனர்.

புதுக்கோட்டையில் விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது விவசாயிகள் பலரும் திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட கடைமடைப்படை பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் வந்து சேரவில்லை என கடுமையாக குற்றம்சாட்டினர்.

அப்போது பேசிய விவசாயி ஒருவர், மேட்டு அணை 2 முறை நிரம்பியது. பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு 1 மாதத்துக்கு மேலாகிவிட்டது, ஆனால் இன்னும் இங்ன தண்ணீர் வந்து சேரல, நாங்க எப்படி விவசாயம் பண்ணுறது? அதிகாரிகளும் அரசும் என்னதான் செய்யுது ? இந்த பொதுப் பணித்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கல,  கால்வாய்கள், ஏரிகள், தூர்வாரல.. என சகட்டுமேனிக்கு வறுத்தெடுத்து விட்டார்.

இதனால் அதிர்ந்து போன அமைச்சர், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் உடனடியாக நடவடிக்கை எடுத்து காவிரி நீரை பாசனத்துக்கு கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டார். அமைச்சரையும், அதிகாரிகளையும் நேரடியாக விவசாயி ஒருவர் தாக்கிப் பேசியது அந்த கூட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!