5 மாதங்களுக்கு பின்னர் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு விசாரணை: வழக்கறிஞர்களுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்.

By Ezhilarasan BabuFirst Published Sep 7, 2020, 2:04 PM IST
Highlights

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 5 மாதங்களாக வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் சோதனை அடிப்படையில்  நேரடி வழக்கு விசாரணை தொடங்கி  உள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 5 மாதங்களாக வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் சோதனை அடிப்படையில்  நேரடி வழக்கு விசாரணை தொடங்கி  உள்ளது. கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் மூடப்பட்டு, அவசர வழக்குகள் மட்டும் வீடியோ கான்பரன்சிங் மூல்ம் விசாரிக்கப்பட்டன. ஜூலை 6 முதல் அனைத்து நீதிபதிகளும், புதிய மற்றும் நிலுவை வழக்குகளை காணொளி காட்சி மூலம் மட்டுமே  விசாரிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதன்படி, இரு நீதிபதிகள் அடங்கிய ஆறு அமர்வுகளும், 27 தனி நீதிபதிகளும், ஜூலை 6 முதல் வழக்கமான நடைமுறைப்படி வழக்குகளை விசாரித்து வருகின்றனர். இந்த காணொளி காட்சி விசாரணையின் போது, இடையூறுகள், தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக, திறமையாக தங்கள் வாதங்களை முன் வைக்க முடியவில்லை எனவும்,வழக்கறிஞர்கள் கவலை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சாஹி  தலைமையில்  மூத்த  நீதிபதிகள் 7 பேர் அடங்கிய  நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இந்த நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இன்று  முதல் சோதனை அடிப்படையில் நேரடி வழக்கு விசாரணையை தொடங்க முடிவு செய்யப்பட்டது. இரண்டு வாரங்களுக்கு சோதனை அடிப்படையில் நடைபெற உள்ள நேரடி வழக்கு விசாரணையில் காலை இரு நீதிபதிகள் அடங்கிய மூன்று அமர்வும், மாலை இரு நீதிபதிகள் அடங்கிய மூன்று அமர்வும் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  வழக்கறிஞர்களின் உடைகளில் தளர்வுகள் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில்  உயர்நீதிமன்றத்திற்கு வரக்கூடிய வழக்கறிஞர்கள் வெள்ளை சட்டையுடன் neck band அதாவது கழுத்து பட்டை மட்டும் அணிந்து ஆஜராகலாம் என அறிவுறுத்தபட்டுள்ளது. 

சென்னை உயர் நீதிமன்றத்தின் வடக்கு வாசல் வழியாக மட்டுமே வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.மேலும், முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டுமெனவும், அனைத்து நுழைவு வாயில்களிலும் கைகளை கழுவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். வழக்கறிஞர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்த பின்னரே நீதிமன்றத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். காய்ச்சல், சளி, இருமல் அறிகுறி இருந்தால் நீதிமன்றத்திற்குள் செல்ல அனுமதியில்லை. 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு வர வேண்டாம் எனவும், நீதிமன்றத்தின் உள் இயங்கும் நூலகம், உணவகங்கள் செயல்படாது எனவும் தெரிவிக்கபட்டுள்ளது. பின்னர் செய்தியாள ர்களிடம் பேசிய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இது  வழக்கறிஞர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மத்திய மாநில அரசுகள் அனைத்து தளர்வுகளையும் அறிவித்துள்ளது. ஆனால் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை. புதிய வழக்குகளை விசாரணைக்கு எடுத்து கொள்ள தலைமை நீதிபதி அனுமதிக்க வேண்டும். புதிய வழக்குகள் விசாரணை இல்லாததால் இந்த முறையில் பலன் இல்லை. அனைத்து நீதிமன்றங்களிலும் முக்கிய வழக்குகளை நேரடி விசாரணைக்கு விரைவில் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

 

click me!