
அரசு பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய மாட்டேன் என கூறிய மூதாட்டி மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என கோவை மாவட்ட எஸ்பி பத்ரிநாரயணன் தகவல் தெரிவித்துள்ளார்.
10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்தது. இந்நிலையில், மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு அசத்தலான திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். அதில், ஒரு திட்டமான அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச கட்டணமில்லா பயணம் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் பெண்கள் கட்டணமின்றி அரசு பேருந்துகளில் பயணித்து வருகின்றனர். தற்போது இந்த திட்டத்தை மேற்கோள்காட்டி, திமுக அமைச்சர்கள் மேடைதோறும் பெருமை பேசி வருகின்றனர்.
இந்நிலையில், பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் மேற்கொள்வது பற்றி அமைச்சர் பொன்முடி ஓசி பயணம் என்று பேசியது பெரும் சர்ச்சையைக் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ வைரலானது. இந்நிலையில், கோவை அரசு பேருந்து ஒன்றில் பயணம் செய்த துளசியம்மாள் என்ற மூதாட்டி ஓசியில் பயணம் செய்வதாக அசிங்கப்படுத்தி பேசுகிறார்கள் என்று கூறி நடத்துனரிடம் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி சென்றார். இதுதொடர்பான வீடியோ வைரலானது. ஆனால் இந்த வீடியோ திட்டமிட்டு அதிமுகவினரால் பரப்பப்பட்டது என்பது தெரியவந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக துளசியம்மாள் உள்ளிட்ட 4 பேர் மீது கோவை மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், திமுக அரசின் சர்வாதிகார போக்குக்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள் என்று அண்ணாமலை ஆவேசமாக கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்;- ஓசி டிக்கெட் என்று ஏழ்மையை ஏளனம் செய்த திறனற்ற திமுக அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்த மூதாட்டியின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதை தமிழக பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த திமுக அரசின் சர்வாதிகார போக்குக்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள் என்று அண்ணாமலை ஆவேசமாக கூறியிருந்தார். இந்நிலையில், பேருந்தில் இலவச பயணச்சீட்டு வேண்டாம் என கூறி வாக்குவாதம் செய்த மூதாட்டி மீது வழக்குப் பதிவு செய்யவில்லை எனவும் சாட்சியமாக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது என கோவை காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.