முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கு.. இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

By vinoth kumarFirst Published May 20, 2022, 11:11 AM IST
Highlights

நீதிபதிகள், ஆட்சியாளர்கள் மாறலாம், அரசு விசாரணை அமைப்புகள் நியாயமாக இருக்க வேண்டும் என்றனர். அதைத்தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும்போது, முதல்கட்ட விசாரணை அறிக்கையை வழங்க தயாராக உள்ளோம் என தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், உயர்நீதிமன்றம் அமைத்த விசாரணைக் குழு அறிக்கையை உயர்நீதிமன்றமே வழங்க மறுப்பது எப்படி முறையாகும் என கேட்டனர்.

டெண்டர் முறைகேடு வழக்கின் முதல் கட்ட விசாரணை அறிக்கையை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்க உள்ளது. 

டெண்டர் முறைகேடு வழக்கு

டெண்டர் முறைகேடு வழக்கில் முதல்கட்ட விசாரணை அறிக்கையை தமிழக அரசு வழங்க உத்தரவிடக்கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. விசாரணையின்போது எஸ்.பி.வேலுமணி தரப்பு மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி, முதல்கட்ட விசாரணை அறிக்கை மனுதாரருக்கு சாதகமாக இருந்தும், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

எஸ்.பி.வேலுமணி மேல்முறையீடு

ஆட்சிமாற்றத்தால், எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக ஆகஸ்டு மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு புதிய விசாரணை அடிப்படையிலானது என தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.ஏ.ஜி. அறிக்கையை காரணம் காட்டுவது திசைதிருப்பும் முயற்சி ஆகும். எனவே, டெண்டர் முறைகேடு வழக்கில் முதல்கட்ட விசாரணை அறிக்கையை வழங்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

அப்போது, நீதிபதிகள், ஆட்சியாளர்கள் மாறலாம், அரசு விசாரணை அமைப்புகள் நியாயமாக இருக்க வேண்டும் என்றனர். அதைத்தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும்போது, முதல்கட்ட விசாரணை அறிக்கையை வழங்க தயாராக உள்ளோம் என தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், உயர்நீதிமன்றம் அமைத்த விசாரணைக் குழு அறிக்கையை உயர்நீதிமன்றமே வழங்க மறுப்பது எப்படி முறையாகும் என கேட்டனர்.

காரசார வாதம்

அதைத்தொடர்ந்து வழக்கறிஞர் ரஞ்சித்குமார், எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தயாராக இருக்கிறது. அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் இம்மாத இறுதியில் தாக்கல் செய்வோம். அப்போது முதல்கட்ட விசாரணை அறிக்கையை வழங்குகிறோம். அந்த அறிக்கை தமிழக அரசு வசமில்லை. உயர்நீதிமன்றத்தில் இருக்கிறது.

இன்று தீர்ப்பு

அப்போது எஸ்.பி.வேலுமணியின் வழக்கறிஞர் முதல்கட்ட விசாரணை அறிக்கை தமிழக அரசு வசமில்லை என்பது உண்மைக்கு புறம்பானது என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் மேல்முறையீட்டு மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில், எஸ்.பி. வேலுமணி  தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்க உள்ளது. 

click me!