கேப்டனுக்கு அமெரிக்காவில் தொடரும் சிகிச்சை! மாநில மாநாட்டை ஒத்திவைத்த தே.மு.தி.க!

By vinoth kumarFirst Published Aug 14, 2018, 3:38 PM IST
Highlights

அமெரிக்காவில் விஜயகாந்திற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த மாநாடு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் அடைந்த தோல்விக்கு பிறகு தே.மு.தி.க இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.கவின் வாக்கு வங்கியும் மிக கடுமையான சரிவை சந்தித்தது.

அமெரிக்காவில் விஜயகாந்திற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த மாநாடு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் அடைந்த தோல்விக்கு பிறகு தே.மு.தி.க இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.கவின் வாக்கு வங்கியும் மிக கடுமையான சரிவை சந்தித்தது. இதனால் அந்த கட்சியுடன் கூட்டணி வைக்க தற்போது யாரும் தயாராக இல்லை. அப்படியே கூட்டணி என்றாலும் கூட தொகுதிகளுக்காக பேரம் பேசும் நிலையிலும் அந்த கட்சி இல்லை.

இந்த நிலையை மாற்ற தே.மு.தி.கவின் தற்போதைய பலத்தை காட்ட திருப்பூரில் பிரமாண்ட மாநாட்டிற்கு விஜயகாந்த் ஏற்பாடு செய்தார். செப்டம்பர் 16ந் தேதி மாநாடு நடைபெற இருந்த காரணத்தினால் அதற்குள் அமெரிக்கா சென்று தனது உடலில் இருக்கும் ஒரு சில சிக்கல்களுக்கு சிகிச்சை பெற்று திரும்பிவிட விஜயகாந்த் திட்டமிட்டார். ஆனால் அமெரிக்காவில் விஜயகாந்திற்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை தொடர்கிறது. 

ஏற்கனவே திட்டமிடப்பட்ட நாட்களுக்குள் விஜயகாந்திற்கு சிகிச்சையை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் விஜயகாந்திற்கு அமெரிக்காவில் அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.இதனால் அவரது மைத்துனரும் தே.மு.தி.கவின் மாநில துணை பொதுச் செயலாளருமான சுதீஷ் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

இந்த நிலையில் திருப்பூர் மாநாட்டு பணிகளை தொடர முடியாது என்பதாலும், விஜயகாந்தாலும் சிகிச்சையை முடித்து மாநாட்டில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டதாலும் தே.மு.தி.க தலைமை அதிரடியான ஒரு முடிவை எடுத்துள்ளது. அதன்படி திருப்பூரில் செப்டம்பர் 16ந் தேதி நடைபெற இருந்த மாநாட்டை மறு தேதி குறிப்பிடாமல் அந்த கட்சி ஒத்திவைத்துள்ளது.  சிகிச்சை முடிந்து விஜயகாந்த் இந்தியா திரும்பிய பிறகே மாநாட்டிற்கான புதிய தேதியை தே.மு.தி.க வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!