
ரஜினியால் ஷூட்டிங் வரமுடியவில்லை என்பதற்காக லதா ரஜினியை வைத்து மீதி படத்தை எடுக்க முடியுமா? சூப்பர் ஸ்டாரின் மனைவியை லேடி சூப்பர்ஸ்டார் என்று ஏற்றுக் கொள்ள முடியுமா! அபத்தமான வாதமாக இருக்கிறதல்லவா?
கிட்டத்தட்ட இதே நிலைதான் தற்போது தே.மு.தி.க.வுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. கேப்டனின் உடல்நிலை சரியில்லை என்பதற்காக கேப்டன்ஷிப்பை அவரது மனைவியிடம் கொடுக்க சொல்லி அக்கட்சியில் எஞ்சியிருக்கும் சிலரில் வெகு சிலர் போர்க்கொடி தூக்கியிருப்பது காமெடி கலந்த டிராஜடி.
ஆர்ப்பரிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட தே.மு.தி.க.வின் வாக்கு வங்கியானது ரெண்டாங்கிளாஸ் பாப்பா ஒண்ணு, ரெண்டு, மூணு சொல்வது போல் அழகாக, அம்சமாக, நேர்த்தியாக அதிகரித்தது. 7% பின் 8 ஆகவும் 10 ஆகவும் மாறி 11 வரை சென்றது.
அசாதாரண அரசியல் சூழலில் கூட மக்களின் அபிமானத்துடன் படிப்படியாக முன்னேறியது அக்கட்சி. ‘இனி ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு ஏறியடிப்போம்.’ என்று கொக்கரித்தது முரசு. எம்.ஜி.ஆருக்கு பின் தமிழக அரசியலில் ஒரு புதிய சாதனையை தனி மனிதனாக விஜயகாந்த் நிகழ்த்தப்போகிறார் என்று அக்கிராஸ் தி கண்ட்ரி மீடியாக்கள் எழுதின.
ஆனால் ’மக்கழே! இமயம் ஏறுமளவுக்கு விருப்பமில்ல. இந்த 11 மாடி கட்டிடமே எனக்கு போதும். ஆங்!” என்றபடி 2011 தேர்தலுக்கு பின் தடதடவென தலைகீழாக இறங்க ஆரம்பித்தார் விஜயகாந்த். அவர் தூக்கி வளர்த்த கட்சி அவரைவிட விரைவாக லிஃப்டில் தரைத்தளம் நோக்கி பாய்ந்தது.
பா.ஜ.க.வுடன் கூட்டணியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும், ம.ந.கூட்டணியுடன் கடந்த சட்டமன்ற தேர்தலிலும் தே.மு.தி.க. அடைந்த வாக்கு சதவிகித சரிவு அவமானங்கள் ஒரு அரசியல் சுயம்புக்கு கிடைத்திருக்கவே கூடாத சுளீர், சுளீர் சாட்டையடிகள். இறுதியாக, ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல் சர்வேயில் தே.மு.தி.க. பெற்ற இடத்தை பார்த்த பிறகுதான் மியாட் மருத்துவமனைக்கு பறந்திருக்க வேண்டும் கேப்டன்.
தே.மு.தி.க.வின் இவ்வளவு மோசமான வீழ்ச்சிக்கு காரணம் விஜயகாந்த் மட்டுமே என்றால் அதில் இரண்டாவது கருத்துக்கு வாய்ப்பில்லை. அவர் எளிமையாக சில விஷயங்களை செய்திருந்தாலே கட்சி காப்பாற்றப்பட்டிருக்கும்...
1) கட்சி அசுரபலம் பெற்றதை தன் மூளைக்கு மட்டுமே ஏற்றியிருக்க வேண்டுமே தவிர தலைக்கு ஏறுவதை தவிர்த்திருக்க வேண்டும். இதனால் தொண்டனையும், பத்திரிக்கையாளனையும், சக அரசியல்வாதியையும் மதிக்கும் குணம் வந்திருக்கும்.
2) பார்த்தசாரதி, சந்திரக்குமார் உள்ளிட்டவர்கள் சொந்த மாவட்டங்களில் பவர் சென்டர்களாக உருவெடுப்பதையும், அதனால் கட்சி பலவீனப்படுவதையும் துவக்கத்திலேயே தடுத்திருக்கவேண்டும்.
3) விஜயகாந்த் எதற்கும் துணிந்த நேர்மையான அரசியல்வாதி (அது உண்மையோ அல்லது பொய்யோ) என்று மக்கள் மனதில் விழுந்த நம்பிக்கை ரேகைகளை எப்பாடுபட்டாவது காப்பாற்றியிருக்க வேண்டும்.
4) தன் கட்சியின் அடிப்படை சித்தாந்தமாக துவக்கத்தில் கோடிட்டு காட்டிய ‘தனித்தே போட்டி’ எனும் விஷயத்தை, அரசியல் ஆதாயத்துக்காக காலப்போக்கில் மறந்தது மட்டுமில்லாமல், யாருடன் கூட்டணி எனும் விஷயத்தில் கண்ணாமூச்சி ஆடி தன்னைத்தானே காலி செய்து கொண்டதை தவிர்த்திருக்க வேண்டும்.
5) மேடைக்கு மேடை கருணாநிதியின் அரசியலை ‘குடும்ப அரசியல்’ என்று வாய்வலிக்க கிழித்தெடுத்தவர் பிரேமலதாவையும், சுதீஷையும் கட்சிக்கோட்டுக்கு அப்பால் நிறுத்தியிருக்க வேண்டும்.
6) இதையெல்லாம் விட மேலாக பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்ட பின் கொஞ்சமேனும் தன் உடல் நலனில் தனிப்பட்ட அக்கறை எடுத்திருக்க வேண்டும்.
7) 2016 சட்டசபை தேர்தலுக்கு பின் தன் கட்சி மளமளவென கரைந்துவிட்டது எனும் யதார்த்தம் இன்னமும் புரியாமல் பழைய கனவிலேயே இருப்பதை பக்கத்தில் உள்ளவர்கள் உலுக்கி தெளிவுபடுத்தியிருக்க வேண்டும்.
இது எதுவுமே நடக்காததன் விளைவு விஜயகாந்தை போலவே தே.மு.தி.க.வும் ‘தொடர்பு எல்லைக்கு அப்பால்’ நிலையிலேயே இருக்கிறது. பிரேமலதாவுக்கு எந்த பதவி மேட்ச் ஆகும்?
கழக பொதுச்செயலாளரா அல்லது கழக தலைவரா! என்று சில காக்காய்கள் உள்விவாதம் நடத்தி கொண்டிருப்பது அக்கட்சியை எந்தளவுக்கு மீட்டெடுக்கும் என்று புரியவில்லை.
கேப்டனுக்காகதான் தே.மு.தி.க. கப்பல் நகருமே தவிர பிரேமலதா எனும் வைஸ் கேப்டனால் அதன் சரிவு நங்கூரம் விலகுமா? என்பது அழ்கடலில் அமிழ்ந்து கிடக்கும் விலகாத புதிர்களில் ஒன்றுதான்.