திமுகவின் அங்கீகாரத்தை ரத்து செய்து.. உதய சூரியன் சின்னத்தை முடக்குங்கள்.. எலக்சன் கமிஷனுக்கு பறந்த பரபரப்பு.!

By vinoth kumarFirst Published Jun 9, 2022, 11:51 AM IST
Highlights

தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட கட்சியான திமுகவின் செயலாளர் ஒருவர், மக்கள் பிரதிநிதித்துவ அடிப்படையில் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள கொள்கைகளை மீறியுள்ளார். பெரியார் சொன்னதைப் போலப் பிராமண சமூகம் இனப்படுகொலை செய்யப்பட வேண்டும் என அவர் கூறியிருக்கிறார்.

பிராமண சமுதாயம் குறித்து இழிவாக பேசிவரும் திமுகவின் அரசியல் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்து, அக்கட்சிக்கு வழங்கப்பட்ட உதயசூரியன் சின்னத்தை முடக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தேர்தல் ஆணையத்துக்கு பரபரப்பு கடிதம் எழுதியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திமுக ஆட்சியமைத்ததில் இருந்து பிராமணர்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்படுவதாக சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் திமுகவின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ்காந்தி, பெரியார் சொன்னதைப் போலத் தமிழகத்தில் பிராமணர்கள் இனப்படுகொலை செய்ய வேண்டும கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவரது பேச்சுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், திமுகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என பாஜக முக்கிய பிரமுகரான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட கட்சியான திமுகவின் செயலாளர் ஒருவர், மக்கள் பிரதிநிதித்துவ அடிப்படையில் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள கொள்கைகளை மீறியுள்ளார். பெரியார் சொன்னதைப் போலப் பிராமண சமூகம் இனப்படுகொலை செய்யப்பட வேண்டும் என அவர் கூறியிருக்கிறார். 

இந்த அச்சுறுத்தல் தமிழ்நாட்டில் உள்ள பிராமண சமூகத்தினரின் அடிப்படை உரிமைகளை நேரடியாகப் பாதிக்கிறது. தேர்தலில் பிராமணர்கள் வாக்களிக்க முடியாதவாறு அச்சுறுத்தப்படுகிறார்கள். இதனால் தேர்தலில் திமுக எளிதில் வெற்றி பெற வேண்டிய சூழல் ஏற்படும். எனவே, இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுத்து திமுகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும்,  உதய சூரியன் சின்னத்தையும் முடக்க வேண்டும்.  இது அவசரமான விஷயம், திமுகவினரை நீதியின் முன் நிறுத்த ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

click me!