
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, தனது தலைமையில் புதிய அமைச்சரவை அமைக்கக் கோரி பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கொடுத்தால், அதை ஆளுநர் நிராகரிக்க முடியாது.
அதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் இடம் இல்லை. ஆளுநர் என்பவர் சட்டசபைக்கு கட்டுப்பட்டே செயல்பட வேண்டும் என்று அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் நடந்த அரசியல் குழப்பத்தின் போது, உச்சநீதிமன்றம் அளித்த வரலற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில், 2015-ம் ஆண்டு, முதல்வர் நபம் துகி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. அந்த ஆண்டு டிசம்பரில் முதல்வருக்கு எதிராக துணை சபாநாயகர் உள்ளிட்ட 21 எம்.எல்.ஏ.க்கள் போர்க் கொடி தூக்கி, 11 உறுப்பினர்கள் கொண்ட பாரதிய ஜனதாவுடன் சேர்ந்தனர்.
இதற்கிடையே பாரதிய ஜனதா அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் ராஜ்கோவா, முன்பு சபாநாயகர் அறிவித்து இருந்த தேதிக்கு ஒரு மாதம் முன்பே சட்டசபையைக் கூட்ட தேதி அறிவித்தார். இந்த கூட்டத்தை முதல்வர் நபம் துகி, சபாநாயகர் புறக்கணித்தனர். அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், பாரதிய ஜனதாவுடன் சேர்ந்து கொண்டு சபாநாயகரை பதவி நீக்கம் செய்தனர். காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகக் கூறி அரசை கவிழ்த்தனர். புதிய ஆட்சியை அமைத்தனர்.
இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொடர்ந்த வழக்கில், வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்தது. அதாவது பெரும்பான்மை இல்லை என டிஸ்மிஸ் செய்யப்பட்ட அரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. இந்திய அரசியல் வரலாற்றில் இதுபோல் இதற்கு முன் நடந்தது இல்லை.
உச்ச நீதிமன்றத்தின் (தற்போதைய தலைமை நீதிபதி) நீதிபதி ஜே.எஸ். கேகர் தலைமையில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, மதன் பி லோக்கூர், பி.சி. கோஸ், என்.வி. ரமணா ஆகியோர் இந்த தீர்ப்பை வழங்கினர்.
தீர்ப்பின் முக்கிய சாரம்சம் பின்வருமாறு-
மாநிலத்தின் ஆளுநர் என்பவர் முதல்வர் மற்றும் அவரது அமைச்சரவையின் ஆலோசனைகள், பரிந்துரைகள் இன்றி, தன்னிச்சையாகவோ, சுதந்திரமாகவோ, சொந்த விருப்பத்தின் அடிப்படையிலோ எப்போதும், எந்த சூழ்நிலையிலும் எந்த முடிவும் எடுக்க முடியாது.
ஒரு மாநில அரசு சட்ட சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடையும் பட்சத்தில்தான் ஆளுநர் என்பவர் முதல்வர், அமைச்சரவையின் ஆலோசனை, உதவி இன்றி செயல்படலாம்.
அதுமட்டுமல்லாமல், முதல்வரின், அமைச்சரவையின் அறிவுரை இல்லாமல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை தன்னிச்சையாகவோ, அல்லது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ேததிக்கு முன்பாகவோ ஆளுநர் கூட்டுவதற்கு அதிகாரம் கொடுக்கப்படவில்லை.
ஆளுநர் என்பவருக்கு அரசியலமைப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, சட்டப்பேரவையில் தலையிடுவதற்கு எந்த விதத்திலும் அனுமதி அளிக்கப்படவில்லை. அவர் மாநிலத்தின் முதல்வர், அவரின் அமைச்சரவையின் அறிவுரை இன்றி சுயமாக செயல்பட முடியாது.
சட்டப்பேரவை நிகழ்வுகளை கண்காணிக்கும் கண்காணிப்பாளராக அவர் இருக்கக் கூடாது. அரசின் செயல்பாடுகளில் இருந்து அவர் எப்போதும் ஒதுங்கியே இருக்க வேண்டும், குறிப்பாக எந்த அரசியல் கட்சிக்கும் சார்பாக நடந்து கொள்ளக் கூடாது.
மாநில அரசின் நிர்வாகத்தில், செயல்பாடுகளில் தலையிடுவதற்கு மாநிலத்தின் ஆளுநருக்கு எந்த விதமான பங்கையும் அரசியலமைப்புச் சட்டம் ஒதுக்கவில்லை. சட்டப்பேரவையைக் கூட்டுவது, எப்படி சட்டசபை செயல்பட வேண்டும் என்பது? என எந்த விசயத்திலும் ஆளுநரின் தலையீடு இருக்கக் கூடாது, அவர் அதை விட்டு ஒதுங்கியே இருக்க வேண்டும்.
ஆளுநர் என்பவர் அரசியலமைப்புச்சட்டம் தீர்மானித்தபடி நடந்து கொள்வது அவசியம். அவர் ஏதாவது ஒரு அரசியல் கட்சிக்கு சார்பாகச் செயல்பட்டு, எந்தவிதமான இக்கட்டான அரசியல் சூழலிலும் சிக்கிக் கொள்ளக்கூடாது.
ஒரு கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள், அதிருப்தி, இணக்கமின்மை முதலியவற்றில் இருந்து ஆளுநர் தூரவிலகி இருக்க வேண்டும்.
எந்த ஒரு அரசியல் கட்சியின் உள் விவகாரங்களில் தலையிடுவதை ஆளுநர் அறவே செய்யக்கூடாது.
ஒரு அரசியல் கட்சிக்கு யார் தலைவராக இருப்பது?, யார் தலைவராக இருக்கக் கூடாது? என்பது அரசியல் சம்பந்தப்பட்டது. அது ஒரு கட்சியின் உள்கட்சி பிரச்சினை, அதனை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள். இந்த மாதிரியான விசயங்களில் கவர்னர் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளக் கூடாது.
ஒரு அரசியல் கட்சியின் உள்கட்சி பிரச்சினைகளை தீர்த்து வைப்பது, சமரசம் செய்வது, இரு கட்சிகளுக்கு இடையிலான பிரச்சினைகளை தீர்த்து வைப்பது ஆகிய விசயங்களை செய்வதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை.
மாநில சட்டப்பேரவை என்பது, ஆளுநருக்கு கீழே செயல்படவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். மாநில சட்டப் பேரவை தொடர்பாக குறைகேட்டு நீதி சொல்லும் நபராக ஆளுநர் செயல்படக் கூடாது.
மாநில சட்டப்பேரவை, முதல்வர், அவரின் அமைச்சரவையை மீறி ஆளுநர் தன்னிச்சையான அதிகாரத்துடன் செயல்பட அரசியலமைப்பு சட்டத்தில் அனுமதி அளிக்கப்படவில்லை.
இவ்வாறு அந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆதலால், அ.தி.மு.க.கட்சியின் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் கையொப்பம் இட்டு, கொடுக்கும் கடிதத்துடன் கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா ஆளுநரைச் சந்தித்து புதிய அமைச்சரவையை அமைக்க கோரும்போது அந்த கோரிக்கையை அவர் நிராகரிக்க முடியாது. புதிய அமைச்சரவையை அமைக்க சசிகலாவுக்கு அழைப்பு விடுக்க வேண்டும்.