
கொடுக்கு கொட்டுனா சின்னமாங்கா அழுகிடும்!: அன்புமணி வாங்கிக் கட்டியது யாரிடம்?
இன்னும் சில மணி நேரங்களில் தமிழகத்தில் 2019 நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்கு பூசணிக்காய் உடைக்கப்போகிறார்கள். கடந்த மூன்று வாரங்களுக்கு மேல் ‘அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே! உங்களின் பொன்னான வாக்குகளை!...’என்று காது சவ்வு வலிக்க, வலிக்க மைக்கில் கஞ்சி காய்ச்சி ஊற்றிய இம்சைகள் ஒருவழியாய் ஓயப்போகின்றன.
கடைசி கட்ட பிரசார அலப்பறைகள் இருக்கின்றதே அவையெல்லாம் அத்தனை ஜாலியானவை. சர்வே ரிசல்ட் சாதகமாக இருந்தால் ஒரு மாதிரி பேசுவது, பாதகமாக இருந்தால் வேறு மாதிரி பேசுவது, உணர்ச்சிவசப்பட்டு மக்களையே திட்டிவிடுவது, அடிதடி கலாட்டாக்கள், தாறுமாறாக தடுமாறி பேசுவது...என்று பரபரப்புகளுக்கு பஞ்சமே இருக்காது.
அதில் சில ஹைலைட்ஸ் இதோ...
இராமநாதபுரம் தொகுதியில் பி.ஜே.பி. வேட்பாளர் நயினர் நாகேந்திரன் போட்டியிடுகிறார். திருப்பாலைக்குடி கிராமத்தில் அவருக்கு ஆதரவாக தேர்தல் வேலை பார்த்த அ.தி.மு.க.வை சேர்ந்த இஸ்லாமியரான முகமது காசிம் என்பவரை சொந்த ஊர் இளைஞர்கள் அடித்துப் பிழிந்துவிட்டனர். ஏன்? என்று கேட்டால்...”என்ன தைரியமிருந்தால் பி.ஜே.பி. வேட்பாளருக்கு வேலை பார்ப்பான்?” என்றனராம்.
வடசென்னை தி.மு.க. வேட்பாளரான கலாநிதி பிரசாரத்தின் போது அடிக்கடி மினரல் வாட்டரில் கைகழுவுகிறார். ஏன் என்றால், களத்தில் பல நூற்றுக்கணக்கான மக்களுக்கு கைகொடுப்பதால்தான். இவரது கைகழுவலை பார்த்து கட்சியினர் டென்ஷனாக, ‘நான் டாக்டர். இப்படி பண்ணி பழகிடுச்சு. சட்டுன்னு மாத்திக்க முடியலை. கைகழுவினால்தான் இயல்பா இருப்பேன்.’ என்று ஓப்பனாக சொல்லிவிட்டாராம்.
சேலம் நாடாளுமன்ற தேர்தல் அ.தி.மு.க. பொறுப்பாளரான மாஜி அமைச்சர் பொன்னையன், வெயிலை எல்லாம் ஒரு பொருட்டாகவே எடுக்காமல் களத்தில் கன்னாபின்னாவென வேலை பார்க்கிறார். ‘எப்டிங்ணா இவ்வளவு சுறுசுறுப்பு?’ என்று கேட்டால்...’வைரம் பாய்ஞ்ச உடம்புப்பா இது!’ என்கிறாராம்.
அ.தி.மு.க. கூட்டணி தலைவர்களை வெகு விமரிசையாக வெளுத்து வாங்குவதில் அப்பா ஸ்டாலினை விட குட்டி உதயநிதி எக்ஸ்ட்ரா சில அடிகள் பாய்கிறார். நாகப்பட்டிணம், திருவாரூர் பிரசாரங்களில் இரு முதல்வகளையும் வகைதொகையில்லாமல் விமர்சித்தவர்...”என்னை கொடுக்கு!ன்னு சொல்லி கிண்டல் பண்ணியிருக்கிறார் சின்னமாங்கா அன்புமணி. இந்த கொடுக்கு கொட்ட கொட்ட எம்மாம் வலி வலிக்கும் தெரியுமா? நான் கொட்டினா சின்ன மாங்கா அழுகிடும்.” என்றபோது பிகிலு காதை கிழித்துவிட்டதாம்.
நடிகர் செந்தில் ஜெயலலிதா இருக்கும்போது வாலை சுருட்டிக் கொண்டு பிரசாரம் செய்வார். ஆனால் இப்போதோ அ.ம.மு.க.வில் அமைப்புச் செயலாளராக இருக்கும் அவர் தான் பிரசாரம் செய்யும் இடங்களில் ஓரளவாச்சும் கூட்டம் இல்லையென்றால், சம்பந்தப்பட்ட நிர்வாகிகளை லெஃப் அண்டு ரைட்டு வாங்குகிறாராம். ‘ஒத்த ஓட்டு விழாது இவர் பேச்சுக்கு. ஆனா சீனை பாரு!’ என்று கடுப்பாகிறார்கள் நிர்வாகிகள்.
தென்சென்னை தொகுதி அ.ம.மு.க. வேட்பாளரான இசக்கி சுப்பையாவுக்கு சொந்த மாவட்டமான திருநெல்வேலியில் செம்ம செல்வாக்கு உண்டு. வேட்பாளரான இவர் ரெண்டு நாள் லீவு போட்டுவிட்டு அம்பாசமுத்திரம் சென்று, அங்கே தங்கள் கட்சி சார்பாக போட்டியிடும் மைக்கேல் ராயப்பனுக்கு ஆதரவாக பிரசாரத்தில் பட்டையை கிளப்பியிருக்கிறார்.
சூழல் மளமளவென தனக்கு பாதகமாய் போவதாக ஃபீல் பண்ண துவங்கிய அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன், இசக்கிக்கே போன் போட்டு ‘ஏம்ணே உங்க தொகுதிய விட்டுட்டு இங்ஙன வந்து எனக்கு கொடச்சல் கொடுக்கீக? உங்க தொகுதிய பாருங்கண்ணே!’ என்றாராம். தன் பிரசாரத்துக்கு இருக்கும் வீரியத்தை உணர்ந்த இசக்கி சுப்பையா, இதற்காகவே எக்ஸ்ட்ரா ஒரு நாள் பிரசாரம் செய்துவிட்டுதான் கிளம்பினாராம்.
ஹவ் இஸ் இட்?!