அதிமுக கூட்டணிக்கு டாட்டா... ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி.. பாமக அதிரடி அறிவிப்பு..!

By Asianet TamilFirst Published Sep 15, 2021, 8:38 AM IST
Highlights

தமிழகத்தில் காலியாக உள்ள 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு பாமக தனித்து போட்டியிடுவதாக அக்கட்சி அதிரடியாக அறிவித்துள்ளது.
 

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று 23 தொகுதிகளில் போட்டிட்ட பாமக, 5 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. அதற்கு முன்பு 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இதே கூட்டணியில் 7 தொகுதிகளில் போட்டியிட்டு படுதோல்வியடைந்தது. இதனையடுத்து அண்மையில் பேட்டி அளித்த டாக்டர் ராமதாஸ், “2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மீண்டும் மாற்றம் முன்னேற்றம் அன்புமணிதான்” என்று என்று கூறியிருந்தார். அதே நேரத்தில் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்றும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அதற்கு மாறாக 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டில் இதுவரை உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத, புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் பாமகவின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க கட்சியின் தலைமை நிலைய நிர்வாகிகள், 9 மாவட்டங்களின் துணை பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் எனது தலைமையில் இணைய வழியில் நடந்தது.
இந்த கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சி கருதி இந்த தேர்தலில் தனித்து போட்டியிடலாம் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். அதனடிப்படையில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடுவது என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது என்பதை ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து செப்டம்பர் 15, 16 தேதிகளில் விருப்ப மனுக்கள் பெறப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில துணை பொதுச்செயலாளர்கள் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்வார்கள். விண்ணப்பித்தவர்களிடம் உயர்நிலை குழு மூலம் நேர்காணல் நடத்தி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர்.” என்று ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பின் மூலம் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு உருவான பாமக-அதிமுக கூட்டணி உடைந்துள்ளது.

click me!