இடைத் தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு இவங்க தான் காரணம் !! வானிலை ஆய்வு மையத்தை வம்புக்கிழுக்கும் தினா !!

By Selvanayagam PFirst Published Oct 8, 2018, 12:08 PM IST
Highlights

திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் அறிவிக்கப்படாததற்கு வானிலை ஆய்வு மையமே காரணம் என்றும் வானிலை ஆய்வு மையத்திலும் அரசியல் புகுந்துவிட்டதால் தான் இடைத் தேர்தல் நிறுத்தப்பட்டதாக அமமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சதீஷ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதியை நேற்று முன்தினம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத் தோதல் தேதி அறிவிக்கப்படவில்லை.

இது குறித்து செய்தியாளர்களிடையே பேசிய தேர்தல் ஆணையர் ராவத், தமிழகத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்கள் மழைக்காலம்  என்பதால் தேர்தல் நடத்த முடியவில்லை என தெரிவித்தார்.

இது தொடர்பாக  தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தேர்தல் ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில்,  தமிழகத்தில் தற்போது ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது,தொடர்ந்து மழைக்காலம் வரவுள்ளது. எனவே தற்போது இடைத் தேர்தல் நடத்த சாத்தியமில்லை என தெரிவித்திருந்தார். இதைக் காரணம் காட்டியே இடைத்  தேர்தல் நடத்த முடியவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம்தெரிவித்துள்ளன. அதிமுக இடைத்தேர்தலை சந்திக்க அஞ்சுகிறது என பலர் கிண்டல் செய்யத் தொடங்கி விட்டனர். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய  அம்மா மக்கள்முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்,  இடைத் தேர்தலை நிறுத்த வானிலை ஆய்வு மையத்தை அதிமுக பயன்படுத்திக் கொண்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

நேற்று தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் தமிழகத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று வெயில் சுள்ளுளென்று அடித்தது. இது தான் தனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதாக தினகரன் தெரிவித்தார்.

ரெட் அலர்ட் கொடுத்தவுடன் தலைமைச் செயலாளர்  தேர்தலை நடத்த  முடியாது என கடிதம் எழுதிவிட்டார். கடிதம் எழுதி அனுப்பியவுடன் ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதிலிருந்து வானிலை ஆய்வு மையமும் அரசியலுக்குள் சிக்கிக் கொண்டதோ என தினகரன் பகீர் சந்தேகத்தைக் கிளப்பினார்.

click me!