திருவாரூர் திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் தேதி அறிவிப்பு! தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பதில்...

By sathish kFirst Published Nov 26, 2018, 1:13 PM IST
Highlights

அடுத்த ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் திருவாரூரில் இடைத் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பதில்மனு தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் ஆகியோரின் மறைவையடுத்து திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புடன் இந்த இரு தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படிப்பட்ட அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

இதுகுறித்து பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர், “மழை காரணமாக தற்போது இடைத்தேர்தல் வேண்டாம் என தமிழக தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியதால் இடைத் தேர்தலுக்கான தேதியை தற்போது அறிவிக்கவில்லை” என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சிகள் இடைத் தேர்தலை உடனே நடத்த வேண்டுமென வலியுறுத்தியிருந்தன.

இதற்கிடையே திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலை உடனே நடத்த வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு கொடுக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள்  தேர்தல் எப்போது நடத்தப்படும் என்று நவம்பர் 26ஆம் தேதிக்குள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டனர்.

இவ்வழக்கு இன்று  மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், பதில் மனு தாக்கல் செய்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, வரும் பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.  

click me!