தொலைபேசி இணைப்பு வழக்கு... மாறன் சகோதரர்களுக்கு முற்றும் நெருக்கடி!

By vinoth kumarFirst Published Nov 9, 2018, 4:36 PM IST
Highlights

பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்யக்கோரிய மாறன் சகோதரர்களின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்யக்கோரிய மாறன் சகோதரர்களின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தவிர குற்றச்சாட்டுகளை புதிதாக பதிவு செய்யவும் உத்தரவிட்டனர்.

 

காங்கிரஸ் ஆட்சியின் போது 2004-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை தொலைத்தொடர்புத் அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி தன் சகோதரர் கலாநிதி மாறனின் சன் தொலைக்காட்சிக்கு BSNL-லின் 700-க்கும் மேற்பட்ட இணைப்புகளை முறைகேடாக வழங்கியதாகவும், இதனால் அரசுக்கு ஒரு கோடியே 79 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும், 2013-ம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது. 

இந்த வழக்கில், இதற்கு ஆதாரமில்லை என மாறன் சகோதரர்கள் உட்பட அனைவரும், விடுவிக்கப்பட்டனர். இதை எதிர்த்து சிபிஐ தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், மாறன் சகோதரர்கள் உட்பட 7 பேரும் மீண்டும் வழக்கை சந்திக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

  

இந்நிலையில் இந்த வழக்கு சென்னை 14-வது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டு பதிவுகளை ரத்து செய்யக்கோரி தயாநிதி மாறன், கலாநிதி மாறன், கவுதமன், கண்ணன் உள்ளிட்ட 5 பேர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு அக்டோபர் 25-ல் விசாரணைக்கு வந்த போது குற்றம்சாட்டப்பட்டவர்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சான்றுதல் இல்லாமல் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டை ரத்து செய்ய வேண்டும் வாதாடினார்.  

சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சான்றுதல் இல்லை எனக் கூறி குற்றம்சாட்டப்பட்டோர் ஏற்கனவே தொடுத்த வழக்குகளை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்ததாக குறிப்பிட்டார். குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்யக் கூடாது, மேலும் வழக்கை சந்திக்க உத்தரவிட வேண்டும் என்றும் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார். 

இன்று தீர்பளித்த நீதிபதி, குற்றச்சாட்டுப் பதிவை எதிர்த்த அனைத்து மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மீண்டும் புதியதாக குற்றச்சாட்டுப் பதிவு செய்ய வேண்டும் என்றும், 7 பேரும் வழக்கை சந்திக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

click me!