Breaking News :பேரறிவாளன் விடுதலை தொடர்பாக 3 நாட்களில் ஆளுநர் முடிவு.. நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்.

By Ezhilarasan BabuFirst Published Jan 21, 2021, 2:46 PM IST
Highlights

அதேநேரத்தில் பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வது குறித்து மாநில ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு எந்த மனுவும் தாக்கல் செய்யவில்லை என பேரறிவாளன் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக 3 நாட்களில் ஆளுநர் முடிவெடுப்பார் என மத்திய அரசு சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா தெரிவித்துள்ளார்.  பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு விசாணை வந்த நிலையில் நீதி மன்றத்தில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி,  பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் தற்போது ஆயுள் தண்டனை சிறைக் கைதிகளாக உள்ளனர். 

கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள இவர்களை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என தமிழக அமைச்சரவையால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காத நிலையில் உச்ச நீதிமன்றம் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேரறிவாளன் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில்,  முக்கிய முடிவு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. முன்னதாக நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது பேரறிவாளன் விடுதலை தொடர்பாக யார் முடிவெடுக்க வேண்டும் என்பது குறித்த சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும், பேரறிவாளன் விடுதலை செய்வது குறித்து குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

அதேநேரத்தில் பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வது குறித்து மாநில ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு எந்த மனுவும் தாக்கல் செய்யவில்லை என பேரறிவாளன் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது அப்போது பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக இன்னும் மூன்று தினங்களில் தமிழக ஆளுநர் முடிவு எடுப்பார் என மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா தெரிவித்தார். அதனையேற்ற நீதிபதிகள் வழக்கு விசாரணை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தவிட்டனர். இந்த தகவல் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 
 

click me!