
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்க உள்ளது. இந்நிலையில், தீர்ப்பு எந்த தரப்பிற்கு சாதகமாக வந்தாலும், எதிர்தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தயாராகிவிட்டது.
முதல்வர் பழனிசாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். ஆட்சிக்கும் கட்சிக்கும் எதிராக நடந்துகொண்டதால் அவர்களை தகுதிநீக்கம் செய்யுமாறு அதிமுக கொறடா ராஜேந்திரன், சபாநாயகரிடம் பரிந்துரைத்தார்.
இதையடுத்து இதுதொடர்பாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அவர்களில் ஜக்கையன் மட்டும் சபாநாயகரிடம் விளக்கம் அளித்தார். மற்றவர்கள் விளக்கம் அளிக்காததால், தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களையும் சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தார்.
தகுதிநீக்கத்தை எதிர்த்து 18 எம்.எல்.ஏக்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் அமர்வு, இன்று பிற்பகல் 1 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் தீர்ப்பு, அரசியல் தலைவர்களால் மட்டுமல்லாது மக்களாலும் எதிர்நோக்கப்படுகிறது. எதிர்காலத்தில் இதைப்போன்ற வழக்குகளுக்கு முன்னுதாரணமாக இந்த தீர்ப்பு திகழும். எனவே இந்த தீர்ப்பை அனைத்து தரப்பும் ஆவலுடன் எதிர்நோக்குகிறது.
இந்நிலையில், தீர்ப்பு எந்த தரப்புக்கு சாதகமாக வந்தாலும் எதிர்தரப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இரண்டு தரப்பும் தயாராக இருக்கிறது. அதற்காக இருதரப்பு வழக்கறிஞர்களும் டெல்லிக்கு விரைந்துள்ளனர்.
அதனால், இந்த வழக்கு இன்றுடன் முடிவடையாது என்பது மட்டும் உறுதியாகிறது.