இருவரும் வேண்டாம்... அவருக்கே கொடுத்து விடலாம்.. அதிமுக தலைமை எடுத்த முடிவு..!

By Thiraviaraj RMFirst Published Feb 24, 2021, 1:08 PM IST
Highlights

அதாவது இவர்கள் இருவருக்கும் வேட்டு. மற்ற ஒருவருக்கு தரலாம் சீட்டு என்கிற முடிவை தலைமை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் யாருக்கு சீட்டு என்பதில் இருவருக்குள்ளும் நடந்து வரும் முட்டல் மோதலில், மூன்றாம் நபருக்கு வாய்ப்புக் கொடுக்கலாம் என அதிமுக தலைமை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

வேளச்சேரி பகுதி கழக செயலாளர் மூர்த்தியும், சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்கும் மோதிக் கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் அதிமுகவினர் கோஷ்டி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இருவரும் மற்றி மாற்றி தலைமைக்கு புகார்களை தட்டி விட்டு வருகின்றனர். 

'’தென்சென்னை தெற்கு -கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக் தலைமைக்கும், கழகத்திற்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். தலைமை கழகம், மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கும் எந்த ஒரு நிகழ்வையும் , தகவலையும் பகுதி கழக செயலாளரிடம் தெரிவிப்பதில்லை. இது மட்டும் இல்லாமல் அம்மா அவர்களின் நினைவிடம் திறக்கும் நாளில் தலைமை கழகம் மாவட்ட செயலாளரிடம் பத்து லட்சம் ரூபாய் வழங்கி ஆட்கள் அழைத்து வர சொன்ன நிலையில் 5000 நபர்களை அழைத்து வர வேண்டிய இவரோ 12 வட்டத்திலும்  மொத்தம் 1040 நபர்களை அழைத்து வந்தது அனைவரும் அறிந்த ஒன்று. இதேபோல் எடப்பாடி, ஓ.பிஎஸ் இருவரும் இணைந்து ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தேர்தல் பரப்புரையின்போதும் இதே நிலைதான் தலைமையில் வாங்கிய பத்து லட்சம் ரூபாயில்  மூன்று லட்சம் செலவு செய்து மிதமுள்ள ஏழு லட்சத்தை அபேஸ் செய்தார் எங்கள் மாவட்டச் செயலாளர்.

எனவே இது போன்ற நிலை மேலும் நீடிக்காமல் தலைமை வழங்கிய பணத்தை நபர் ஒருவருக்கு 200 வீதம் வழங்கி இருந்தார். அதுவே நமக்கு வாக்கு வங்கியாக மாறி இருக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே மிகழும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். கழக ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணன் எடப்படி-ஓ.பி.எஸ் ஆகிய இருவரும் தயவு கூர்ந்து கவனத்தில் கொண்டு விசாரணை நடத்தி மைலாப்பூர்-வேளச்சேரி பகுதிகளில் ஏற்பட்டுள்ள நம் கட்சி பிரச்னைகளுக்கு தீர்வு காணும்படி கேட்டுக் கொள்கிறேன்’’என வேளச்சேரி பகுதி கழக செயலாளர் மூர்த்தி சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக் மீது குற்றம்சாட்டி இருந்தார். 

வேளச்சேரி தொகுதியில் 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எம்.கே.அசோக். 2016ம் ஆண்டு முனுசாமிக்கு அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், திமுகவை சேர்ந்த வாகை சந்திரசேகர் வெற்றி பெற்றார். தற்போது மீண்டும் தனக்கு சீட் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கிறார் முன்னாள் எம்.எல்.ஏ.,வும், தற்போதைய மாவட்ட செயலாளருமான அசோக். ஆனால், அவர் மீது கட்சிக்குள் ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன. அதில் ஒரு சாம்பிள்தான் வேளச்சேரி பகுதி கழகச் செயலாளர் மூர்த்தி அனுப்பிய அந்தக் குற்றச்சாட்டு கடிதம். அதே போல் மூர்த்திக்கும், அசோக்குக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருக்கிறது. காரணம் மூர்த்தியும் இந்த முறை தனக்கு எம்.எல்.ஏ சீட் வேண்டும் எனக் கேட்டு வருகிறார்.

அசோக்கும், மூர்த்தி மீது புகார்களை தலைமைக்கு அடுக்கி மனுக்களாக அனுப்பி வருகிறார். இதனால், வர்களை பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர தலைமை மாற்று முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இவர்கள் இருவருக்கும் வேட்டு. மற்ற ஒருவருக்கு தரலாம் சீட்டு என்கிற முடிவை தலைமை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, அ.ம.மு.க.,வில் இருந்து அதிமுகவில் இணைந்த முன்னாள் கவுன்சிலர் சரவணனுக்கு கிடைக்கலாம் எனக்கூறப்படுகிறது. 

2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி கவுன்சிலராக 200வது வார்டில் போட்டியிட்ட சரவணன் அதிக வாக்குகள் பெற்று அதிமுக சார்பில் வெற்றி பெற்றார். அதாவது 11 ஆயிரத்து 500 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் பெற்ற வாக்குகள் 650 மட்டுமே. இப்போதும் தொகுதியில் சரவணன் செல்வாக்குடன் இருப்பதால் அவருக்கே சீட் கொடுக்க அதிமுக தலைமை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 


 

click me!